அமைச்சர் எச்சரிக்கை..! கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை..!
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-
ஆம்னி பஸ்கள் கடந்த 2 ஆண்டுகளாகப் பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. ஆம்னி பஸ் மூலம் பயணம் செய்யும் பயணிகள் சுமூகமான பயணம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பிலிருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்.
ஆம்னி பஸ்களில் அதிகம் கட்டண வசூலிப்பதாகப் பெறப்படும் புகார்களையடுத்து, அரசு சார்பில் இலவச தொலைபேசி எண் (1800 4256151) வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளிக்காகச் சுமார் 1,000 தனியார் பஸ்களை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம். கட்டண உயர்வு தொடர்பாகப் புகார் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு ஏதேனும் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டண வசூலிப்பதாக எங்களுக்குப் புகார் வரும் பட்சத்தில் அவர்கள்மீது நிச்சயம் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். பயணத்தை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளுக்கு எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.