எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு அமைச்சர் கொடுத்த பலே யோசனை..!
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்காக வாங்குவோர்-விற்போர் இரண்டு நாட்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடக்க விழா கோவை ‘கொடிசியா’ வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடந்தது. தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விழாவை தொடங்கி வைத்தார்.
மாவட்ட தொழில் மையம் சார்பில், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.8.41 கோடி மதிப்பில் கடனுதவிகளையும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பில் கடனுதவி என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.11.06 கோடி மதிப்பீட்டில் கடன் விடுவிப்பு ஆணைகளையும், ரூ.76 லட்சம் மதிப்பில் கடன் மானியம் விடுவிப்பு ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியது: ”தமிழ்நாட்டில் 28 லட்சத்து 42 ஆயிரம் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இந்திய அளவில் 2-ம் இடத்தில் உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர், 31 லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.9 லட்சத்து 81 ஆயிரத்து 690 கோடி அன்னிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எம்எஸ்எம்இ துறை சார்பில் ரூ.63 ஆயிரத்து 573 கோடி முதலீட்டில் 5,068 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் இன்று தமிழ்நாடு தொழில்துறையில் முதல் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. 10 புதிய திட்டங்களுக்கு ரூ. 164 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு திட்டமாக வாங்குவோர் – விற்போர் சந்திப்புகள் நடத்துவதற்கு ரூ.5 கோடியே 94 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களுக்கு பரந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்த வாங்குவோர் – விற்போர் சந்திப்பு தொழில் நகரமாம் கோவை மாநகரில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் இந்திய ரூபாய் மதிப்பில் பொருட்களை தயாரித்து அதனை இந்தியாவிலேயே விற்கும்போது அதன் லாபம் குறைவாக இருக்கும். அதனை டாலர் மதிப்பில் வெளிநாடுகளில் சந்தைப்படுத்தும் போது அவற்றின் லாபம் மேலும் அதிகமாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக இந்த வாங்குவோர் – விற்போர் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த சந்திப்பில் ஜெர்மனி, ஜப்பான். அமெரிக்கா, மலேசியா, உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து 28 கொள்முதலாளர்களும், தமிழ்நாட்டில் இருந்து 250- க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், கலந்துகொண்டு தங்கள் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகச்சிறந்த வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த சந்திப்பில் சென்னையைவிட கோவையில் அதிக வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன். எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி. பல புதிய திட்டங்களை கோவை மாவட்டத்துக்கென அறிவித்து செயல்படுத்தி வருகிறார்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் இல.நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கொடிசியா தலைவர் எம்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.