1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர் மகன் பிரெஞ்சு படிக்கிறார்! ஏழைகள் படிக்க கூடாதா?: அண்ணாமலை!

1

புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார் மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான். அவரது பேச்சுக்கு தமிழகம் முழுவதும் பலத்த கண்டனங்களை பெற்றுள்ளது. இதை அடுத்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் மகன் தமிழுக்கு பதிலாக பிரெஞ்சு படிக்கிறார் எனவும், திமுக தலைவர்கள் தொடங்கி கவுன்சிலர் மகன் வரை மூன்று மொழிகளை படிக்கின்றனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் வரை இருக்கும் அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது:-

தனியார் பள்ளிகளில் படிக்கும் திமுகவினரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழிகள் கற்கலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிக்க வாய்ப்பு மறுப்பதா? அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள்? உங்களுக்கொரு நியாயம், எளிய மக்களுக்கு ஒரு நியாயமா?

நானும் ஆரம்பத்தில் அரசியலில் தேசிய கட்சிகள் என்றால் தூரத்தில் வைத்து தான் பார்த்தேன். ஆனால் அதற்குப் பிறகுதான் அதன் அருமை தெரிந்தது. குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டதன் காரணமாகவே கொண்டுவரப்பட்டது புதிய கல்விக் கொள்கை. ஆனால் தமிழை வைத்து இங்கே திமுக பிழைப்பு நடத்தி வருகிறது. தமிழகத்தின் அரசு பள்ளிகளில் 52 லட்சம் மாணவ மாணவிகள் படிக்கின்றனர். ஆனால் தனியார் பள்ளிகளில் 56 லட்சம் மாணவ மாணவிகள் படிக்கின்றனர். சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி, ஐபி பாடத்திட்டத்தின் கீழ் 30 லட்சம் பேர் படிக்கிறார்கள். அதாவது தமிழகத்தை பொறுத்தவரை குறைந்தது 30 லட்சம் மாணவர்கள் மூன்று மொழிகளை படித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி திமுகவின் கடைசி கவுன்சிலர் வரை அவர்களது குழந்தைகள் மூன்று மொழிகள் கொண்ட பள்ளிகளில் படிக்கின்றனர். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மகன் கூட மூன்றாவது மொழியாக பிரஞ்சு படிக்கிறார். ஆனால் ஏழை எளிய குடும்பங்களில் இருந்து அரசு பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் மூன்றாவது மொழியில் படிக்கக் கூடாதா? 2024ல் வந்த ஏசர் ஆய்வு முடிவுகளின் படி இரண்டாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் ஒரு பாராவை மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு படிக்கத் தருகின்றனர். அதில் 83 சதவீத மூன்றாம் வகுப்பு மாணவர்களால் படிக்க முடியவில்லை. ஐந்தாம் வகுப்பில் 63 சதவீதம் பேருக்கு படிக்க தெரியவில்லை. எட்டாம் வகுப்பில் 38 சதவீதம் பேருக்கு படிக்க முடியவில்லை. ஆனால் திமுகவினரின் பிள்ளைகள் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவலம் இழைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like