வைரலாகும் உண்ணாவிரத மேடையில் அமைச்சர் உதயநிதி கண்கலங்கிய வீடியோ..!

. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இதுவரை 24 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதனை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளனர்.
இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சாா்பில் மதுரை தவிர தமிழ்நாடு முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் உயிரிழந்த 24 மாணவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், நீட் தேர்வுக்கு எதிராக பலர் விடும் சாபம் பாஜக ஆட்சியை ஒழித்து விடும் என்றும் கடுமையாக சாடினார்.
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், அனிதா பற்றிய காணொலியை பார்த்து கண் கலங்கிய கழக இளைஞரணிச் செயலாளர் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்!#UdhayanidhiStalin | #Anitha | #BanNeet | @Udhaystalin pic.twitter.com/jadDAvVTmB
— அ அறிவரசு (@a_arivarasu66) August 20, 2023
மேலும், உதயநிதி ஸ்டாலின் காலத்தில் நீட் தேர்வு ஒழிந்தது என்ற செய்தி சரித்திரத்தில் இடம் பெறும் என்றும் அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்தார். திமுகவின் அடுத்த தலைவராகும் தகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு இருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இந்நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் மாணவி அனிதா குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. அப்போது மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.