அமைச்சர் உதயநிதி வரும் பிப்ரவரி 13-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன்..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்ம ஒழிப்பு மாநாடு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் வேண்டும எனவும், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிக்க தான் வேண்டும், எதிர்க்க முடியாது எனவும் கூறியிருந்தார்.
அதேபோல், சனாதன தர்மத்தையும் எதிர்க்க கூடாது, அதனை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார். மேலும், அந்த உரையில்,"சனாதானம் என்ற சொல் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. அதன் அர்த்தம் நிலையானதாகவும் மாற்ற முடியாததாகவும் இருப்பது. ஆனால் நாம் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது" எனவும் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்" என பேசியிருந்தார்
இந்நிலையில் உதயநிதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக, பாஜக மற்றும் வலதுசாரியினர் இந்த விவகாரத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்து மத சாமியார் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து, உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார் என்பதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.
இந்த வழக்கில் வாதிட்ட தமிழ்நாடு அரசு "விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் இத்தகைய மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. நாடு முழுவதும் 40க்கும் அதிகமான வழக்குகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு விளம்பர நோக்கத்துடனே இவர்கள் செய்கிறார்கள். மனு தாக்கல் செய்துவிட்டு பிறகு வெளியே வந்து ஊடகங்களிடம் பேட்டி அளிப்பதற்காக தான் இதை இவர்கள் கடைபிடிக்கிறார்கள். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டது.
அந்த வகையில், கடந்தாண்டு செப். 4ஆம் தேதி அன்று பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கறிஞர் கவுஷலேந்திர நாராயணன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரில், "சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துகள் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் பிப்.13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.