மாபெரும் சைக்ளோத்தான் போட்டி : அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்..!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனம் இணைந்து நடத்திய மாபெரும் சைக்ளோத்தான் போட்டியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
தமிழக அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் மாபெரும் சைக்ளோத்தன் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி அருகே கானாத்தூர் ரெட்டிக்குப்பத்தில் நேற்று நடைபெற்றது.
மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 1100-க்கும் மேற்பட்ட சைக்ளிங் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த சைக்ளோத்தான் போட்டியினை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தி, ஹெச்.சி. எல் நிறுவனத் தலைவர் சுந்தர் மகாலிங்கம், ஆசிய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்புத் தலைவர் ஓன்கர் சிங், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.