சி.வி.சண்முகத்திற்கு, அமைச்சர் சிவசங்கர் கேள்வி..! அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு, அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
'மானம் உள்ள யாரும், பிறரை அப்பா என, அழைக்க மாட்டார்கள்' என, நிதானம் இல்லாமல் உளறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
ஜெயலலிதா, சசிகலா, பழனிசாமி என காலத்திற்கு ஏற்றார் போல், போற்றி பாடுவதற்காகவே, தன் வாயை வாடகைக்கு விடுபவர். அம்மா, அம்மா என, ஜெயலலிதா இருக்கும்போது உருகிய சண்முகத்தின் நாக்கு, ஜெயலலிதா இறந்த பின் 'சின்னம்மா இல்ல, எங்க அம்மா' என, சசிகலாவையே அம்மா ஸ்தானத்தில் வைத்தார். அம்மாவை மாற்றியவர் எல்லாம், அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா?
அவமானப்படுத்துவது அரிய கலை. அது சண்முகத்திற்கு அற்புதமாக வாய்த்திருக்கிறது. மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் என, அனைத்து வயது பெண்களும், பலன் பெறும் வகையில், தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கையும், பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும், கணிசமாக உயர்ந்துள்ளதை, பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் செல்லும் இடங்கள் எல்லாம் கூடும் பெண்கள், 'நன்றி அப்பா' என, உருகுகின்றனர். அதைத்தான் உங்களில் ஒருவன் கேள்வி பதிலில், முதல்வர் குறிப்பிட்டார். தமிழக பெண்கள் தலை நிமிர்வது, அ.தி.மு.க., வுக்கு உறுத்துகிறது. அந்த பெண்கள் அப்பா என, முதல்வரை அழைப்பது, அடிவயிற்றில் எரிகிறது. அதனால்தான் அருவருக்கத்தக்க நாராச மொழியில் பேசியிருக்கிறார் சண்முகம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது