அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு..!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கைது செய்யப்பட்டபோது, நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சை முடிந்த பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் முன், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
இதற்கிடையே, புழல் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால், செந்தில் பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் முன்னிலையில் வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜரானார். விசாரணையின் முடிவில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, அக்டோபர் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு இது 8-வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ,