குட் நியூஸ் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி..! கோடைகால பிரச்சனை இனி இல்லை..!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “கோடைக் காலத்தை பொறுத்த வரை எந்த வித தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் நடைபெற வேண்டும் என மின் வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படலாம்.
ஏப்ரல், மே மாதத்திற்கு 6,000 மெகா வாட் அளவுக்கு கூடுதலாக தேவைப்படும் என கணக்கிட்டு அதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒரு யூனிட் 8 அல்லது 9 ரூபாய்க்குள் வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நேரங்களில் யூனிட் 12 முதல் 15 ரூபாய்க்கு வாங்கப்படுவதாக உண்மைக்கு மாறாக தகவல்கள் வரும். ஆகவே, இந்த விளக்கத்தை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றில் 250க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள இடங்களில் நிலங்கள் கேட்கப்பட்டுள்ளது, அதற்கான பணிகளும் விரைவுபடுத்தப்படும்.
வரக்கூடிய ஆண்டுகளில் தேவைப்படும் மின் உற்பத்தியை தமிழகமே சொந்தமாக உற்பத்தி செய்யக்கூடிய அளவில் புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2030க்குள் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மின்சாரத் துறையில் காலியாக உள்ள அவசியமான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என விரிவாக விளக்கினார்.
மேலும், “முதல்வர் தலைமையில் அரசு நிர்வாகம் மிகவும் வெளிப்படைத் தன்மையோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோடைக் காலத்தை சமாளிப்பதற்கு மின்சார வாரியம் தயாராக உள்ளது” என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.