சித்ரா பௌர்ணமியில் அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அப்டேட்..!

தேனி மாவட்டம் கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதிகள் பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்ளும் மலைப் பாதை உள்ளிட்ட இடங்களை ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனத்துறை, தமிழ்நாடு வருவாய்த் துறை, இந்து அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.
இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேனி வாண்ணாத்திப்பாறை மலையில் சிதிலமடைந்து காணப்படும் மங்கலதேவி கண்ணகி கோயிலை புனரமைத்து ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் திருவிழா போன்று மாதந்தோறும் பௌர்ணமியன்று அம்மன் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். அதோடு பளியங்குடி மலை வழியாக பக்தர்கள் சென்று வரும் பாதையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் கோயில் அமைந்துள்ள இடம் மற்றும் பாதை உள்ளிட்ட இடங்கள் தமிழகத்திற்கு சொந்தமானது என்று நமது கடந்த கால ஆவணங்கள் கூறுகின்றன. இது தான் நமது நிலைப்பாடும். அதே சமயம் கேரள அரசும் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது
மேலும் கண்ணகி கோயில் தொடர்பாக தமிழகம், கேரள மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதோடு சபரிமலை அய்யப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் தங்கும் விடுதி அமைத்துத் தர முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், அண்மையில் சென்னை வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி அறநிலையத்துறை செயலருடன் கடிதம் வழங்கப்பட்டது.
மேலும் சபரிமலை அய்யப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் தங்கும் விடுதி அமைத்துத் தர முடிவு எடுக்கப்பட்டு அது குறித்தும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. விரைவில் கண்ணகி கோயில் மற்றும் சபரிமலை பிரச்சினைகள் தொடர்பாக இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும" என தெரிவித்தார்.
மேலும், அறநிலையத்துறை சார்பில் நடப்பாண்டு கண்ணகி கோயில் செல்லும் பக்தர்கள் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது என்றும், வருங்காலத்தில் தரிசனம் முடித்துச் செல்லும் பக்தர்களுக்கு குமுளி உள்ளிட்ட இடங்களில் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அமைச்சர் சேகர்பாபு, சாமி தரிசனம் மேற்கொண்டபோது தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தேனி எம்பி தங்கதமிழ்செல்வன், கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.