இனி ஈச்சனாரி விநாயகர் கோவில் உள்பட 5 கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் - அமைச்சர் சேகர்பாபு..!
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இன்று(டிச. 20) கோவை மாவட்டம், ஈச்சனாரி, அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, புதிய திட்டங்கள் மற்றும் சேவைகளையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் 2021-2022 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்பின்படி, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாக இதுவரை 20 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
2024-2025 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, "திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் தற்போது 20 திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இவ்வாண்டு மேலும் 5 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இன்று ஈச்சனாரி, அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம், அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.