எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் சேகர்பாபு..!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது,
பழனி ஆண்டவர் கலைக்கல்லூரியில் வரும் 24,25-ல் அனைத்துலக முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. முருகன் மாநாட்டிற்காக தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.6 கோடி வழங்கப்படவுள்ளது. முருகன் மாநாட்டிற்காக ஒவ்வொரு ஷிப்டிலும் 1,200 காவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர்.
மாநாடு நடைபெறும் இடத்தில் பக்தர்களுக்காக இலவச பேருந்து வசதி, கழிவறை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பலர் வரவுள்ளனர்.
150 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சிறந்த கட்டுரைக்கு பரிசு வழங்கப்படும். முருக பக்தர்கள் மாநாடு என்பதால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரலாம். இதையே வரவேற்பாக ஏற்று எல்.முருகன் பங்கேற்கலாம்.
இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழகத்தில் உள்ளது. பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் தி.மு.க. அரசு தலையிடாது. ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், அரோகரா என்றாலும் ஏற்றுக்கொள்வோம்.
கோவிந்தா கோவிந்தா என்றாலும் ஏற்றுக்கொள்வோம், ஓம் முருகா என்றாலும் ஏற்றுக் கொள்வோம். முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பார்கள். மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.