எஸ்.பி.வேலுமணி கருத்துக்கு அமைச்சர் பதிலடி!
அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதிவரை, உயர்மட்டப் பாலம் அமைக்கும் திட்டம் கடித எண் 23504/திட்டம்- 1. 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கருத்துரு உருவாக்கப்பட்டது. பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் ஒப்பனக்கார வீதி சாலைகளில், அதிகப் போக்குவரத்துச் நெரிசல் இருந்ததாலும், உக்கடம் பகுதியில், போக்குவரத்துச் நெரிசல் மிக அதிகமாக இருந்ததாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த கருணாநிதியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
14.11.2011இல் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில், உயர்மட்டப்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த மனம் இல்லாமல், ஏழு ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2.4.2018 அன்று பாலப்பணி தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது. கோவை மாவட்டத்தில், மிகப்பெரிய அதிகார மையமாகச் செயல்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி 7 ஆண்டுகாலம் கோவை மாவட்ட மக்களின் மீது எவ்வித அக்கரையும் காட்டவில்லை.
10 ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2018-2019ம் நிதியாண்டில், 24.1.2021 அன்று, உயர்மட்டப் பாலத்தினை நீட்டித்து. மீண்டும் பணி துவங்க ஒப்பந்தம் போடப்பட்டது. 7.5.2021 அன்று, திராவிட மாடல் ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக ஆட்சிப் பொறுப்பேற்றபோது 12 சதவீத பாலப்பணிகள் மட்டுமே முடிந்து இருந்தன. இப்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் என்னிடம் அறிவுறுத்தினார்.
முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, பலமுறை கோயம்புத்தூர் தளத்திற்கே சென்று, ஆய்வுக் கூட்டங்களை நடத்தியதுடன், பொறியாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் எந்தெந்த வகையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று, அறிவுரைகள் வழங்கிச் செயல்படுத்தியுள்ளேன். என்னுடைய தொடர் நடவடிக்கையின் காரணமாக 88 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டன. இப்பாலப்பணிக்கு சுமார் ரூ.318 கோடி நிதி திராவிட மாடல் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளன.
சாலையைப் பயன்படுத்தக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுக்களின் கோரிக்கைகளை ஏற்று, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காலவிரயத்தைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால், 9.8.2024 அன்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
இந்த உயர்மட்டப்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது குறித்து தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் படத்துடனும் பாராட்டியுள்ளதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வேலுமணி உண்மைக்குப் புறம்பானச் செய்திகளை, பேட்டியாக அளித்துள்ளார். “காமாலை கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்” என்ற முது மொழிக்கேற்ப, கழக ஆட்சியால் பல பணிகள் செய்யப்பட்டுள்தை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம்.
தற்போது, நடைபெற்று வரும் திருச்சி சாலை சுங்கம் பகுதியில், ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணி 31.8.2024க்குள் முடிக்கப்படும். இப்பணி விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்பதையும் வேலுமணிக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.