அமைச்சர் ரகுபதி அட்டாக்..! சால்வை போடுபவன் எல்லாம் திமுக காரனா?
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதில் கைதாகியுள்ள ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவன் என்று எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர். இதற்கிடையே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
துணை முதலமைச்சருடன் யாரேனும் புகைப்படம் எடுப்பது சகஜம்தான். அமைச்சருக்கு சால்வை போடுபவன் எல்லாம் திமுக காரனா? வழக்கை மறைக்க திமுகவுக்கு எந்த அவசியமும் இல்லை. அதிமுக ஆட்சியில் நிர்மலா தேவி என்ற பேராசிரியை மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ள முயன்றார்.
புகார் அளிக்கப்பட்டு 6 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்ட அவர், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கும் திமுகவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், குற்றவாளியைக் காப்பாற்றும் எண்ணம் இல்லை என்று அவர், குற்றவாளிக்கு உரியத் தண்டனை பெற்றுத் தருவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்ற அவர், விவரங்களை வெளியிட்டால் பாதிக்கப்பட்ட பெண் எப்படி தைரியமாகப் புகார் அளித்திருப்பார் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழக அரசு மீது நம்பிக்கை இருந்ததாலேயே பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்த விவகாரத்தை அரசியலாக்க நினைத்தால் அது நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.