1. Home
  2. தமிழ்நாடு

சமூக வலைதளத்தில் அமைச்சர் பி.டி.ஆர் - அண்ணாமலை மோதல்..!

1

 தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நேற்று காலை தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பி கருத்து ஒன்றை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, பிரதமர் நரேந்திரமோடி பேட்டியளித்தபோது, “சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டத்தை அளித்துள்ளன. இதனால் மெட்ரோ ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், இலவச பஸ் பயணத்திட்டத்தின் காரணமாக போக்குவரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது” என்று கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

இது ஒரு கேலிக்கூத்து. கேலிக்கூத்தர்கள் ஒவ்வொருவரும் யார் முதலிடத்துக்கு வருகிறோம் என்பதற்காக போட்டியிடுகின்றனர். மேலும், இந்த காட்சி என்பது பிரதமர் ஏன் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை? என்பதை விளக்குகிறது. அங்குள்ளவர்கள் ஒரு பத்திரிகையாளராக செயல்பட்டிருந்தால், உடனே சில கேள்விகளை எழுப்பி இருக்க வேண்டும். அதில் முதலாவது கேள்வி, இப்படி ஏதாவது ஒரு இடம் உள்ளதா? ஒரு இடத்தில் மெட்ரோ ரெயில் சேவை மட்டுமே இருந்து பஸ் சேவைகள் இல்லாமல் இருக்கிறதா?.

பொதுப்போக்குவரத்தை பொறுத்தமட்டில் மாணவர்கள், வயதானவர்கள், மாதாந்திர பஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவில்லையா?. பஸ் சேவையானது மெட்ரோ ரெயிலின் சேவையை பாதிக்கிறதா? என கேட்டிருக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிக்கு இன்னும் ஏன் நிதி வழங்க ஒப்புதல் அளிக்காமல் மத்திய அமைச்சரவையில் பல ஆண்டுகளாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது?.

அதேவேளையில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு பிறகு வந்த பிற நகரங்களுக்கான மெட்ரோ ரெயில் திட்ட அறிவிப்புகள் மற்றும் ஒப்புதல்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இது சென்னை மெட்ரோ ரெயில் திட்ட பணியை மெதுவாக்கும் செயலா? அதேவேளையில் மெட்ரோ ரெயிலில் ஒருவர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லமுடியாது? என்பதை சுட்டிக்காட்டி இருக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பதிவை பார்த்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பதிலுக்கு பல கேள்விகளை எழுப்பி பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சியில், மக்கள் நலன் மற்றும் சலுகைகள் விலைபோகின்றன. தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தைப் போல ஒவ்வொரு அமைச்சரும் மாறி மாறி பயனாளியை ‘இலவச சுமை’ என்று இழிவுபடுத்துவது உலகில் எங்கும் இல்லை. பால், மின்சாரக் கட்டணம் போன்ற இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், சேமிப்பு என்று அரசு கூறுவது கொடுமையான நகைச்சுவை. வலது பாக்கெட்டில் இருந்து எடுத்து, அதே நபரின் இடது பாக்கெட்டில் நலத்திட்டம் என்ற பெயரில் திருப்பி வைப்பதில் தி.மு.க. கைதேர்ந்தது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து சுமார் 6 ஆயிரம் பஸ்கள், சேவையில் இருந்து நிறுத்தப்பட்டதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக மின்சார பஸ்கள் கொள்முதல் என்பது அறிவிப்பாகவே இருக்கிறது. தி.மு.க. அரசின் மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நிதி இலாகாவை இழந்த அமைச்சர், தனக்கில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுகையில், அரசு பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டர் ஏன் கெல்ட்ரான் (கேரளா) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ரூ.1,000 கோடி டெண்டரில் எல்காட் நிறுவனத்திற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை?. இதற்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விளக்கமளிப்பாரா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் இவ்வாறு சமூக வலைதளத்தில் மோதிக்கொண்டது, அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like