1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருக்கு முக்கிய பொறுப்பு..!

1

பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராக கருமுத்து தி.கண்ணன், 18 ஆண்டுகள் பதவி வகித்தார். இவர் 2023 மே 23-ம் தேதி காலமானார். அதனையடுத்து கோயில் தக்காராக இந்துசமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் க.செல்லத்துரை நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் க.மணிவாசன், 2023 நவ.6-ம் தேதி 5 பேரை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமித்தார். இதில் அமைச்சர் பழனிவேல் தியாராஜன் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன் (83), மதுரை அண்ணாநகர் தொழிலதிபர் பி.கே.எம்.செல்லையா (73), மதுரை கே.கே.நகர் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மு.சீனிவாசன், உயர்நீதிமன்ற அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதியின் மனைவி எஸ்.மீனா, மதுரை காந்தி நகரைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் டி.சுப்புலெட்சுமி ஆகிய 5 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 2023 டிச.1ம் தேதி அறங்காவலர் உறுப்பினர்களாக பதவியேற்றனர். ஆனால் அன்று அறங்காவலர்குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அரசாணையின்படி திருக்கோயிலுக்கு அறங்காவலர் குழு தலைவர் தேர்வு செய்வதற்கான கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால் இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டப்பிரிவு 48ன் கீழ் அறங்காவலர் குழு தலைவர் அரசின் மூலம் தேர்வு செய்வதற்கு மதுரை இணை ஆணையர் பரிந்துரைத்தார். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரசுக்கு அனுப்பிவைத்தார். அறங்காவலர் குழுவின் செயல்பாடுகள் குறித்த விதிகளில் விதி 18ஏ-ன்படியும் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர் குழுவின் தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜனை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன் போட்டியின்றி நியமிக்கப்பட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like