1. Home
  2. தமிழ்நாடு

கையெழுத்து இயக்கத்திற்கு மக்களிடம் பேராதரவு - அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்..!

1

மிழக பாஜக சார்பில் 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கருவில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இதை எடுத்து சென்று 1 கோடி கையெழுத்துக்களை பெற்று, மே மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் மக்கள் இதற்கு கொடுத்துள்ள ஆதரவை தெரிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு மாபெரும் ஆதரவு மக்களிடம் இருந்து கிடைத்துள்ளதாக கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சம கல்வி, மும்மொழி கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கின்ற மிகப்பெரிய ஒரு மக்கள் கோரிக்கையை மக்கள் மன்றத்தில் வைக்கும் விதமாக மாபெரும் கையெழுத்து இயக்கமானது நடைபெற்று வருகிறது.

இந்த இயக்கத்திற்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் பேராதரவு வந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசாங்கம், காவல் துறையினுடைய தடைகளையும் மீறி மிகப் பெரிய அளவில் மக்கள் ஆதரவு இதற்கு கிடைத்துள்ளது என கூறினார்.

இன்று மெட்ரிக் பள்ளியில் படிப்பவர்கள் மூன்று மொழி படிக்கின்றனர், சி.பி.எஸ்.சி பள்ளியில் படிப்பவர்கள் மூன்று மொழி கற்கின்றனர் ஆனால் ஏன் சாதாரண அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது?  என கேள்வி எழுப்பினார்.

பண வசதி படைத்தவர்களுக்கு மும்மொழி கற்கும் வாய்ப்பு உள்ளது. பணம் இல்லாத ஏழை எளிய மக்கள் அதிகமாக அரசு பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறது. கூடுதலாக ஒரு மொழி கற்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மும்மொழி கல்வி என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது என அவர் கூறினார்.

தமிழகத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமைச்சராக வருகை தந்த போது, பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பை தமிழகத்தில் மாணவர்கள் தமிழிலேயே கற்க தமிழ்நாடு அரசு வழி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ஆனால் தமிழக அரசு 'தமிழ் தமிழ' என்று பேசுகிறதே தவிர தமிழுக்கு எதையும் செய்வதில்லை. இன்று உலகம் முழுவதும் தமிழுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும், தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார் என குறிப்பிட்ட அவர், இன்று உலகம் முழுவதும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையங்களை அமைத்துள்ளோம், காசி தமிழ் சங்கம், சௌராஷ்டிரா தமிழ் சங்கம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். தமிழை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் அரிய பணியை பிரதமர் நரேந்திர மோடி செய்து வருகிறார். இதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிந்து கொள்ளவேண்டும் என அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பெண்கள் சாலையில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடிவதில்லை. பாலியல் பலாத்காரம் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் தமிழகத்தில் கிடைக்கவேண்டும் என்றால் திமுக அரசு அகற்றப்படவேண்டும், என அவர் கூறினார். 

Trending News

Latest News

You May Like