சீமான் கருத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் பதில்..!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில், ‘‘தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவ தமிழக அரசு அமைக்கும் உதவி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தி தெரிந்தால்தான் வேலைவாய்ப்பு என்று திமுக அரசு கூறுவது அப்பட்டமான இந்தி திணிப்பாகும்’’ என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கீதாஜீவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நலத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம் பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவ பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், “மகளிர் உதவி எண். 181” சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி எண் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், tn.gov.in என்ற இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை, சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில் “அழைப்பு ஏற்பாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்துக்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த ஆட்சேர்ப்புக்கான அறிவிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு வந்தவுடன், அவ்விளம்பரம் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது.
மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம், மத்திய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றுக்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து, அய்யன் திருவள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டமும், 133 அடியில் வானுயர சிலையும் அமைத்தது, உலகத் தமிழ் மாநாடு நடத்தியது, தமிழுக்கு செம்மொழி சிறப்பு பெற்றுத் தந்தது என எண்ணிலடங்கா பெருமைகள் கொண்டது தான் திமுக வரலாறு. தமிழர் பெருமை கூறும் கீழடி அருங்காட்சியகம் அமைத்து, உலகத்தின் பார்வையை நம் மீது திருப்பியது அண்மைக் கால வரலாறு. மேலும், அரசுப்பணிகளில் தமிழ் மொழியில் பயின்றவருக்கு முன்னுரிமை அளித்து அரசாணை வெளியிட்டது திராவிட மாடல் அரசு.
தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்பட்டது. இவ்வாறாக தமிழ்மொழி வளர்ச்சிக்கான இவ்வரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை. இ்வ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.