1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர் துரைமுருகன் அதிரடி : திமுகவில் மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்!

1

 மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று அசுர பலத்துடன் இருக்கும் திமுக, 2026-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெறும் வகையில், கட்சியிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நிர்வாக வசதிக்காகவும், சட்டப்பேரவை தேர்தல் பணிக்காகவும் சில மாற்றங்களை திமுக தலைமை செய்து வருகிறது.

அதன்படி, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதாவது அதிமுகவில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பும், விழுப்புரத்திலும் அதிமுகவில் இருந்து வந்தவரும், சி.வி.சண்முகத்தை வீழ்த்திய லட்சுமணனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்த செஞ்சி மஸ்தான், திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில் அப்துல் வஹாப் ஆகியோருக்கும் மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் மாற்றப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த எஸ்.எம். மதுரா செந்தில் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நாமக்கல் மாவட்டம் கொத்தமங்கலத்தை சேர்ந்த கே.எஸ்.மூர்த்தி, நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே  தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.மதுரா செந்தில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் நாமக்கல் மேற்கு மாவட்டக் செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like