சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன் கருணாநிதி சிலை நிறுவும் திட்டம் பற்றி அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!
சேலத்தில், ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் டி.ஆர்.சுந்தரம் என்பவரால் கடந்த 1935 இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தொடங்கப்பட்டது. இங்கு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜானகி ஆகியோர் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சேலத்தில் தங்கியிருந்து மாடர்ன் தியேட்டர்ஸுக்காக மறைந்த முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதியுள்ளார்.
இதில் கருணாநிதி கதை வசனத்தில் தயாரான மந்திரிகுமாரி படத்தின் மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமானார். அதேபோல தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் வண்ணப்படமான அலிபாபாவும், 40 திருடர்களும் மிக பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரியில் சேலம் வந்தபோது, தனது தந்தை கருணாநிதி பணிபுரிந்த மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு நினைவு சின்னம் அருகே நின்று சுயபடம் எடுத்தார்.இந்தநிலையில், மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு அலங்கார வளைவில், எச்சரிக்கை இந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது எனவும், அத்து மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல எல்லைக்கற்கள் வைக்கப்பட்டுள்ளது. மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு உள்ள இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என சேலம் மாவட்ட நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை கோட்ட பொறியாளர் துரை ஒரு செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.இதனிடையே நிலத்தின் உரிமையாளர் விஜயவர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு உள்ள நிலம் தங்களுக்கு சொந்தமானது என்றும், நில ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அந்த இடத்தைக் கொடுக்க விரும்பவில்லை.
இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தங்களது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் விஜய் வர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
இது குறித்து அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளன.
இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது. தற்போது, மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பகுதியின் நுழைவாயில் வளைவு சேலம் ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண் 8- ல் உள்ளது.
இந்த சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால், டிசம்பர் 02- ஆம் தேதி அன்று, அளவீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அளவீட்டின் போது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அரசின் நிலவரை படத்தில் உள்ளவாறு, எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.
மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ. சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே, இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர, வேறு இடத்தைக் கேட்டு அரசுத் தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை தெளிவுபடுத்தப்படுகிறது.” இவ்வாறு அமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.