அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போதைய நிலவரம் - மருத்துவமனை அறிக்கை..!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று (ஆகஸ்ட் 12) காலை சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக செல்லும் போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து முதலுதவி சிகிச்சைப் பிறகு தனியார் மருத்துவமனையிலேயே சுமார் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தார். அதைத் தொடர்ந்து, உடல்நிலைச் சீரானதும் கிருஷ்ணகிரி நிகழ்ச்சிகளை ரத்துச் செய்துவிட்டு, பரிசோதனைகளுக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவமனையில் அமைச்சருக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரின் உடல்நிலைக் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.