இனி அனைத்து சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ்..!
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வினா - விடை புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (டிசம்பர் 20) காலை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தம் 2 லட்சம் வினா - விடை வங்கி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர்கள் உதவியுடன் இந்த வினா - விடை அனைத்து மாவட்டங்களுக்கும் படிப்படியாக அனுப்பி வைக்கப்படும்.
வரலாறு காணாத மழையை தமிழகம் சந்தித்திருக்கிறது.இந்த மழையால் மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பாக கணக்கெடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் மாணவ, மாணவிகள் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்கள் எளிதாக தங்களது கல்வி சான்றிதழ்களை பெறும் வகையில் இணைய வழி சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 14 நாட்களுக்குள் தேவையான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும்.
10, 11, 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை பொறுத்தவரை எந்தவித தேதி மாற்றமும் இல்லை. பொதுத்தேர்வு பாடத் திட்டங்கள் நிறைவு பெறாமல் இருப்பதால், சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்படும் என்று அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பிய உடனே அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என கூறினார்