1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி : மாணவி ஞானதர்ஷினியின் கனவு நிச்சயம் நிறைவேறும்..!

1

புதுக்கோட்டை மாவட்டம் குருங்களூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் ஞானதர்ஷினி என்ற மாணவி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் நாளிதழில் வெளியாகி இருந்தது. அக்கடிதத்தில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குருங்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறேன். இந்தப் பள்ளியில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகள்களும், மகன்களும்தான் படித்து வருகிறோம். மாணவர்களுக்கான உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்று பல நல்ல திட்டங்களை எங்களுக்காகச் செய்திருக்கிறீர்கள். இதற்காகத் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். உங்களிடம் இரண்டு கோரிக்கை, எங்கள் பள்ளியைச் சுற்றி சுவர் எழுப்பினால், தோட்டம் அமைத்து, தூய்மையாகப் பராமரிக்க முடியும். அப்படியே ஸ்மார்ட் வகுப்பறையும் அமைத்துக் கொடுத்தீர்கள் என்றால் எங்களின் கனவு நிறைவேறிவிடும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இக்கடிதத்தை மேற்கோள்காட்டி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில், அன்பு மாணவி ரா.ஞானதர்ஷினியின் கனவு நிச்சயம் நிறைவேறும். முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாணவியின் இரண்டு கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். இன்றே குருங்களூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். 

Trending News

Latest News

You May Like