முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையினை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு..!
திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையினை வழங்கியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ரோட்டரி சங்கத்தின் சீரிய முயற்சியால் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி டயாலிசிஸ் சென்டர் நடைபெற்று வருகிறது. நகர பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர, முதல்- அமைச்சர் காப்பீடு திட்டத்தினை முதன்முதலாக கருணாநிதியால் கலைஞர் காப்பீடு திட்டம் என்று கொண்டு வரப்பட்டது. பின்னர் வந்த அரசு, அந்த திட்டத்தினை முதல்- அமைச்சர் காப்பீடு திட்டம் என்று பெயர் மாற்றி விட்டனர்.
பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளவர்கள், ஏழை, எளியோர்கள் பல்வேறு நோய்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து சிறப்பு டாக்டர்களை கொண்டு நோய்களை குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமானதாக இருந்தது. அதனால் நடுத்தர, ஏழை மக்களுக்காகவே தலைவர் கருணாநிதியால் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது, என பேசியுள்ளார்.
மேலும், ரோட்டரி சங்க உறுப்பினர்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலைகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கலாம். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறிய புத்தகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ரோட்டரி சங்கம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடம் சாலை விபத்து குறைப்பது எப்படி தன்னை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வுகளை பள்ளியிலும், கல்லூரியிலும் ஏற்படுத்திவிட்டாலே விபத்து குறைந்து விடும். பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கிற விழிப்புணர்வு அது குடும்பத்தில் உள்ளவர்கள் அறிவார்கள். எனவே மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் ரோட்டரி சங்கம் மூலம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்தினை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என பேசியுள்ளார்.