மீண்டும் மினி பஸ் சேவை துவக்கம்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மினி பஸ் சேவையை அரசு மீண்டும் கொண்டுவரும் விதமாக மாநிலம் முழுவதும் 2,000 மினி பஸ்களை இயக்கும் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தஞ்சாவூரில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் பலன் மக்களுக்கு கிடைக்கும் விதமாக மாவட்டத்தில், விரிவாக்கம் செய்யப்பட்ட 22 பழைய வழித்தடம் மற்றும் 8 புதிய வழித் தடம் என மொத்தம் 30 வழித்தடத்தில் மினி பஸ் சேவை வழங்குவதற்கான துவக்க விழா காந்திபுரம் ஆம்னி பஸ் நிலைய வளாகத்தில் இன்று காலை நடந்தது.
கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் 8 மினி பஸ், கோவை வடக்கில் 4 மினி பஸ், கோவை மேற்கில் 15 மினி பஸ், கோவை தெற்கில் 1 மினி பஸ், பொள்ளாச்சியில் 2 மினி பஸ் என மொத்தம் 30 மினி பஸ்கள் இன்று காலை முதல் இயங்க துவங்கின. இந்த பஸ்களில், குறைந்தபட்சம் ரூ.2, அதிகபட்சம் ரூ.10 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பவன்குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது, ''ஏற்கனவே டவுன் பஸ்கள் இயங்கக் கூடிய 65 சதவீதம் இடம், டவுன் பஸ்கள் செல்ல முடியாத பகுதிகள் 35 சதவீதம் இடம் என மொத்தம் 100 சதவீதம் இடங்களிலும் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 116 வழித்தடத்தில் மினி பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இது, நகர்ப்புற பகுதி மக்களை விட, கிராமப்புற பகுதி மக்களுக்கு பெரிதும் பயன் உள்ளது ஆகும். மிக குறுகலான சாலையில் கூட இந்த மினி பஸ்களை இயக்கி, மக்களுக்கு சேவை அளிக்க முடியும் என கூறினார்.