1. Home
  2. தமிழ்நாடு

இன்று பால், தயிர், உப்பு ஆகியவற்றை உணவில் தவிர்த்து விரதம் இருக்க வேண்டும்..!

1

ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி திதியும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்ததாகும். மற்ற விரதங்களை விட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் இருக்கும் விரதத்திற்கு சக்தி அதிகம். அதுவும் குறிப்பிட்ட மாதங்களில் வரும் பெளர்ணமி மற்றும் அமாவாசை வழிபாடு கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


கார்த்திகை பெளர்ணமிக்கு பிறகு, சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் இணைந்து வரும் பெளர்ணமியை சித்ரா பெளர்ணமி என அழைக்கிறோம். சித்ரா பெளர்ணமி நாளில் தான் மதுரை சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்வார். அந்த சமயத்தில் பக்தர்களும் விரதமிருந்து, கள்ளழகர் வேடமிட்டு, அவர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் வழிபடுவார்கள்.

இந்த நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாம். மதுரைக்கு வந்து கள்ளழகரை தரிக்க முடியாதவர்கள், வீடுகளில் விளக்கேற்றியோ அல்லது பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கோ அல்லது ஏதாவது ஒது கோவிலுக்கோ சென்று வழிபடலாம். சித்ரா பெளர்ணமி, அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற நாளாகும். குறிப்பாக சந்திர பகவானை இந்த நாளில் வழிபட வேண்டும். ஜோதிட சாஸ்திரப்படி சந்திர பகவான் மனோகாரகன் என அழைக்கப்படுகிறார். ஒருவர் மனநிலை தெளிவாக இருக்க சந்திரன் சரியாக இருக்க வேண்டும்.

அதே போல் சித்ரா பெளர்ணமி அன்று வழிபட வேண்டிய மற்றொரு நபர் எம தர்மரின் கணக்காளரான சித்ர குப்தனை. ஒருவர் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதி வைக்கக் கூடியவர் சித்ர குப்தன். இவரின் அவதார தினமாக சித்ரா பெளர்ணமி கருதப்படுகிறது. இந்த நாளில் சித்ர குப்தரின் படம் இருந்தால் அதை வைத்து வழிபடலாம். அப்படி இல்லாதவர்கள் கையில் ஏடும், எழுத்தாணியும் வைத்திருக்கும் அவரது உருவத்தை அரிசி மாவில் வரைந்து, "எங்களின் பாவ கணக்கு அதிகமாகாமல் இருக்கவும், புண்ணிய கணக்கு அதிகரிக்கவும், பாவ செயல்களை செய்வதற்கு என்னை தூண்டும் புத்தியை மாற்றி, புண்ணிய காரியம் செய்வதற்கான புத்தியை கொடு" என வேண்டிக் கொள்ள வேண்டும்.

சித்ர குப்தரை வேண்டிக் கொண்டு, அன்றைய தினம் பால், தயிர், உப்பு ஆகியவற்றை உணவில் தவிர்த்து விரதம் இருக்க வேண்டும். அவருக்கு நைவேத்தியமாக சித்ர அன்னம் எனப்படும் சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலவை சாதங்களை படைக்க வேண்டும். வீட்டின் பூஜை அறையில் சித்ர குப்தருக்கு நைவேத்தியங்கள் படைத்து, தீபாராதனை காட்டிய பிறகு, சந்திரனை வழிபட வேண்டும்.

இரவு 7 மணிக்கு மேல் மொட்டை மாடி, வீட்டு வாசல் என சந்திர தரிசனம் முழுமையாக தெரியக் கூடிய இடத்தில் 5, 9, 11 என்ற கணக்கில் தீபம் ஏற்ற வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு தீபமாவது நெய் தீபமாக இருக்க வேண்டும். இப்படி விளக்கேற்றி, அந்த நைவேத்தியங்களை சந்திரனுக்கு படைத்து, சந்திரனை வழிபட்ட பிறகு வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிலாச் சோறாக சித்ர அன்னங்களை உண்ண வேண்டும்.

இந்த நாளில் விரதமிருந்து சித்ர குப்தரையும், சந்திர பகவானையும் வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும், மனம் தெளிவடையும், குழப்பமான நிலை மாறும், செல்வம் பெருகும். அன்றைய தினம் நான்கு பேருக்காவது அன்னதானம் வழங்குவது மிகப் பெரிய புண்ணியத்தை தரும். சித்ரா பெளர்ணமி நாளில் சத்ய நாராயண பூஜை செய்தும் வழிபடலாம்.
 

Trending News

Latest News

You May Like