செங்கல்பட்டில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டதால் பரபரப்பு..!

அதிமுக - பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டதன் காரணமாக, கூட்டணியில் இருந்து பாஜகவை விலக்குவதாக, அதிமுக தலைமை அறிவித்தது. இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்களும் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ரவுண்டானவில் உள்ள எம்ஜிஆர் சிலையின் கழுத்திலும், கையிலும் காவி துண்டு அணிவித்துள்ளனர். விடியற்காலையில், எம்ஜிஆரின் கழுத்திலும், கையிலும் காவி துணியை கண்டதால், அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கண்டித்து அதிமுக தொண்டர்கள் சாலை மறியல் ஈடுபடத் தொடங்கினர்.
இந்த தகவலை அறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மறியலை கைவிட செய்தனர்.இதையடுத்து, எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதிமுக-பாஜக கூட்டணி பிரிந்த நிலையில் திருப்போரூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு காவிதுண்டு அணிவித்திருந்த சம்பவம் அப்பகுதியில் அதிமுகவினுடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.