எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் : ஏழைகள் நெஞ்சத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட எம்ஜிஆர் திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.இவரது கதைத்தேர்வு என்பது பாமர மக்கள், ஏழை தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது. மேலும் பெண்கள் மத்தியிலும் எம்ஜிஆருக்கு செல்வாக்கு உயர்ந்தது. இதனால் அவருக்கு அரசியலில் பெரிய எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்பட்டது.
இதற்கிடையே தான் திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம்ஜிஆர் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றார். தொடர்ந்து 2 முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். பள்ளியில் நடைமுறையில் இருந்த மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றி பெரும் வரவேற்பை பெற்றார்.
இன்றும் எம்.ஜி.ஆருக்கு ஓட்டு போடுகிறோம் என்று இரட்டை இலைக்கு ஓட்டு போடுபவர்கள் சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர் மக்கள் மனதில் எவ்வளவு ஆழமாக இறங்கியிருக்கிறார் என்று தெரிந்துகொள்ளலாம். தமிழ் திரை உலகை பல வருடங்களும், தமிழ்நாட்டை 10 வருடங்களும் ஆட்சி செய்த பெருமை கொண்டவர்தான் எம்.ஜி.ஆர். முதல்வராக 10 ஆண்டுகள் பதவி வகித்து மக்களின் மனதில் என்றைக்கும் நீங்காத தனிப்பெரும் தலைவராக உயர்ந்து நிற்கும் அதிமுக என்னும் கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் 37வது நினைவு தினம் இன்று.
சினிமாவில் தனிப்பெரும் சூப்பர்ஸ்டாராக திகழ்ந்த எம்ஜிஆர் உழைக்கும் மக்கள், பழங்குடி மக்கள், விவசாயிகள், மீனவர்கள், காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் எல்லோர் கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கேற்ற கதைக்களங்களைத் தேர்வு செய்தார். ஒவ்வொருவரும் தங்களில் ஒருவராக எம்.ஜி.ஆரை மனதில் நினைக்கத் தொடங்கினர். அங்கிருந்து ஒருவர் எழுந்து வரும்போது அவரை ஆதரிக்காமல் மக்கள் யாரை ஆதரிக்கப் போகிறார்கள்.
வயதானவர்கள், பெண்கள் மீது எம்ஜிஆர் உயர்ந்த கருத்துகளை வைத்தார். அதற்காக தாய்க்குலத்திடம் வரவேற்பு அதிகரித்தது, அவரது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்ட எம்ஜிஆரின் படங்களுக்கு சிறுவர் ரசிகர் பட்டாளமும் இருந்தது. அவர்களுக்கான நல்ல கருத்துக்களையும், தன் படங்களில் அவர் சொல்லத் தவறியதில்லை. 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே', 'புத்தன் ஏசு காந்தி பிறந்தது', 'அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்', 'நல்லப் பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, 'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா’ என்று குழந்தைகளை தூக்கி பாடி அவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சேர்த்து அறிவுரை கூறி ஆழமாக மனதில் பதிந்தார்.
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்று தனது திரைப்படங்களில் பாடல்களின் மூலம் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தி பாட்டாளி மக்கள் இடையே ஆதரவை பெற்றார். எம்.ஜி.ஆர் இயல்பிலேயே கருணை குணம், துணிச்சல், சிந்தனைத் தெளிவு போன்றவற்றைக் கொண்டிருந்தார். அதுவே அவர் அரசியலுக்கு வர அடித்தளமாக அமைந்தது. அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றிய அவர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வெளியில் சென்ற அவர், அவருக்கான ஆதரவை காண்பிக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி தனிப்பெரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டை தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்து, தேர்தலில் தோல்வியற்றவராக மறைந்தார். தமிழகத்தின் முதல்வராக பத்து ஆண்டுகள் பதவி வகித்தார். ஏழை மக்கள் மீது அக்கறை கொண்டிருந்த எம்ஜிஆர் அவர்களுக்காக பல்வேறு நல திட்டங்களைக் கொண்டு வந்தார். பால்ய வயதுகளில் பசியிலும் வறுமையிலும் வாடியது போல், மற்ற குழந்தைகளும் பசியோடிருக்கக் கூடாது என்பதற்காக பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தினார். தனது நலத்திட்டங்கள் மற்றும் ஏழைகளிடத்தில் கொண்டிருந்த அன்பு காரணமாக மக்களின் மனதில் நீங்காத தலைவராக இடம் பெற்றிருந்த எம்ஜிஆர், கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே வைக்கப்பட்டு நினைவிடமாக எழுப்பப்பட்டுள்ளது.