1. Home
  2. தமிழ்நாடு

மேட்டூர் நீர்வரத்து 20,505 கனஅடியாக அதிகரிப்பு..!

1

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. மேலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் உபரிநீர் அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. 

இதன் காரணமாக மேட்டூர் அணை கடந்த 30-ம் தேதி 120 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இந்த நிலையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.

இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 9-ம் தேதி வினாடிக்கு 5258 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் 6548 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

நேற்று காலை அது வினாடிக்கு 20 ஆயிரத்து 505 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

Trending News

Latest News

You May Like