1. Home
  2. தமிழ்நாடு

மேட்டூர் அணை இந்தாண்டு 3-வது முறை நிரம்ப வாய்ப்பு..!

1

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரைக் கொண்டு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதியில் இருந்து ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் குறுவை, சம்பா மற்று தாளடி பயிர்களுக்கு 330 டி.எம்.சி. நீர் தேவைப்படும். அதேபோல், அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை கொண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. பின்னர், அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதையடுத்து, காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நடப்பாண்டில், ஜீலை 30-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை முதல் முறையாக எட்டியது. தொடர்ந்து, ஆகஸ்ட் 12-ம் தேதி 2வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியது. பின்னர், மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு நீர் திறப்பின் காரணமாகவும் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைய தொடங்கியது.

டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக பாசனத்துக்கு நீர் தேவை குறைந்ததால், நீர் திறப்பும் குறைக்கப்படடது. அதே நேரத்தில் பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தது. மேட்டூர் அணைக்கு நேற்றுமுன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 4,266 கன அடியாக இருந்த நிலையில், நேற்று 3,004 கன அடியாக சற்று சரிந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,000 கன அடி, கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 118.94 அடியிலிருந்து 119.02 அடியாகவும், நீர் இருப்பு 91.78 டி.எம்.சி.யிலிருந்து 91.91 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 0.98 அடியும், நீர் இருப்பான 93.47 டி.எம்.சி.யை எட்ட இன்னும் 1.56 டி.எம்.சி.யும் மட்டுமே தேவை. தற்போது, அணைக்கு வரும் நீர்வரத்தும், திறப்பும் இதேநிலை நீடித்தால் ஒரு வாரத்தில் நிரம்ப வாய்ப்புள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like