கோவையில் மொத்தம் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை..!

தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரமாகவும் திகழும் கோவைக்கு, கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கோவையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகளும் செல்கின்றன.
கோவையில் பொதுப் பயன்பாடு மற்றும் தனிப் பயன்பாடு வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கோவையில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சில சாலைகளை தவிர்த்து பெரும்பாலான சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. தமிழக அரசு சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அவிநாசி சாலை, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இது ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டாலும், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ளது போல், கோவையிலும் பொதுமக்கள் நெரிசலின்றியும், விரைவாகவும் பயணிக்க ஏதுவாக மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களால் விடுக்கப்பட்டு வந்தது.
கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய வெளி மாவட்டங்களை இணைக்கும் 6 பிரதான சாலைகள் உள்ளன. இவற்றில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து கோவையில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு, நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.அதனடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரால் தொடங்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
முதல் வழித்தடமாக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன்ஹால், அவிநாசி சாலை வழியாக நீலாம்பூர் வரை மொத்தம் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 18 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக, கோவை ரயில் நிலையத்தில் இருந்து சத்தி சாலையில் உள்ள வளியம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 14 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ரயில் நிலையம் அமையும் இடங்கள்: அவிநாசி சாலையில் அமையும் முதல் வழித்தடமான உக்கடம் - நீலாம்பூர் வழித்தடத்தில் உக்கடம் பேருந்து நிலையம், டவுன்ஹால், கோவை ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஜி.கே.என்.எம் மருத்துவமனை, லட்சுமி மில் சந்திப்பு, நவஇந்தியா சந்திப்பு, பீளமேடு புதூர் சந்திப்பு, ஃபன்மால் சந்திப்பு, ஹோப்காலேஜ் சந்திப்பு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி சந்திப்பு, விமான நிலையம் உள்ள சிட்ரா சந்திப்பு, எம்.ஜி.ஆர் நகர், பி.எல்.எஸ் நகர், வெங்கிடாபுரம், பார்க் பிளாசா, நீலாம்பூர், விமான நிலையம் ஆகிய 18 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைகின்றன.
சத்தி சாலையில் அமையும் இரண்டாவது வழித்தடத்தில் கோவை ரயில் நிலையம் சந்திப்பில் தொடங்கி ராம்நகர், காந்திபுரம் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், மோர் மார்க்கெட், கணபதி புதூர், அத்திப்பாளையம் சந்திப்பு, ராமகிருஷ்ணா மில்ஸ், விநாயகபுரம், சித்ரா நகர்,சரவணம்பட்டி, விசுவாசபுரம், வி.ஜி.பி நகர், வளியம்பாளையம் ஆகிய 14 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இரண்டு வழித்தடங்களிலும் சேர்த்து மொத்தம் 32 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. கோவை ரயில் நிலையத்தில் இரண்டு மெட்ரோ ரயில்களும் சந்திக்கும் வகையில் ஜங்ஷனும் அமைக்கப்பட உள்ளது.