1. Home
  2. தமிழ்நாடு

சேலத்தில் மெட்ரோ நியோ... திருச்சியில் மெட்ரோ ரயில் : தமிழக அரசுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் பரிந்துரை..!

1

சென்னையில் இரு வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், கோவை, திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக கோரிக்கைகள் எழுந்தன.

அங்கு பெருந்திரள் மற்றும் துரிதப் போக்குவரத்து (எம்ஆர்டிஎஸ்) திட்டம் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, திருச்சி, திருநெல்வேலி, சேலம்ஆகிய மாநகரங்களில் சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டது. இந்நிலையில் சாத்தியக் கூறு அறிக்கை, தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய மாநகராட்சிகளில் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பெருந்திரள் மற்றும் துரிதப் போக்குவரத்துக்கான சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில், மூன்று நகரங்களுக்கும் உகந்த வழித் தடங்கள் கண்டறியப்பட்டன. அதன்படி, போக்குவரத்துத் திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சியில் இரு வழித்தடங்களில் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 45 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் 3 வழித்தடங்களில் 39.07 கி.மீ. தொலைவுக்கு அதிக திறன் கொண்ட பேருந்து அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பு (பிஆர்டிஎஸ்) ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் இரு வழித் தடங்களில் 35.19 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ நியோ திட்டம் செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ நியோ என்பது உயர் நிலை மின்சார இழுவை மற்றும் ரப்பர் டயர்கள் கொண்ட பேருந்து அமைப்பாகும். மெட்ரோ நியோ பெட்டிகள் வழக்கமான மெட்ரோ ரயிலை விட சிறியதாகவும், இலகுவாகவும் இருக்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like