மேலே மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து! கோவையில் முதன்முறையாக இரண்டடுக்கு மேம்பாலம்!

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் போக்குவரத்து நெரிசலும் அதிக அளவில் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இங்கு போக்குவரத்து நெரிசல் இன்னும் கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை எதிர்கொள்ளும் விதமாக மேம்பாலங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இரண்டு வழித்தடங்களில் இந்த மெட்ரோ பாதைகள் அமைக்கப்பட உள்ளது. முதல் வழித்தடமாக உக்கடம் பேருந்து நிலையம் முதல் நீலம்பூர் வரை விமான நிலையம் வழியாக 20.4 கிலோ மீட்டர் தூரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது வழித்தடம் ரயில் நிலையத்திலிருந்து வலியம்பாளையம் பிரிவு வரை சக்தி சாலை வழியாக 14.4 கிலோ மீட்டர் தொலைவு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது இதற்கான நிலங்களப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நிலம் எடுக்க சமீபத்தில் முதற்கட்டமாக 154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த பணிகள் தற்போது விரைவில் மாநகராட்சியின் இணைந்து நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சத்தியமங்கலம் சாலை கணபதி பகுதியில் சாலையை விரிவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை திட்டமிட்டுள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து இப்பகுதியில் கோவை மெட்ரோ ரயில் கையகப்படுத்துதல் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு நிலம் கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலை 54 கோடி ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தான் தற்போது கோவை நெடுஞ்சாலைகள் பிரிவு பொறியாளர் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து அவிநாசி சாலை கோல்ட்வின்ஸ் முதல் லீ மெரிடியன் வரை மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் முதல் தளத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் எனவும், கீழ்த்தரத்தில் வாகன போக்குவரத்து இருக்கும் எனவும் இதனால் திட்ட செலவு வெகுவாக குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.