விரைவில் வரும் மெகா அறிவிப்பு..! 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்..!
RRB NTPC தேர்விற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. இந்தாண்டு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ரயில்வேயில் உள்ள தலைமை வணிகம் உடன் டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் உதவியாளர் மற்றும் தட்டச்சு செய்பவர், மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணியிடங்கள் பட்டப்படிப்பு தரத்தில் நிரப்பப்படுகிறது.
வணிகம் உடன் டிக்கெட் எழுத்தர், கணக்கு எழுத்தர் மற்றும் தட்டச்சர், ஜூனியர் கிளார்க் உடன் தட்டச்சர், ரயில் கிளார்க் ஆகிய பதவிகளுக்கான இடங்கள் 12-ம் வகுப்பு தரத்திலும் நிரப்பப்படுகிறது. இதற்கான நடத்தப்படும் தேர்வு தொழில்நுட்ப அல்லது பிரபல பிரிவுகள் (Non-Technical Popular Categories -NTPC) என குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் சுமார் 35 ஆயிரம் காலிப்பணியிடங்கள் வரை நிரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பட்டப்படிப்பு தகுதிக்கான பதவிகளில் 30,307 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தி இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இதன் மூலம் 2025-ம் ஆண்டுக்கான மெகா அறிவிப்பாக இத்தேர்வு பார்க்கப்படுகிறது.
அறிவிப்பு எப்போது?
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகி, ஆன்லைன் வழியாக செப்டம்பர் 29 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டப்படிப்பு தகுதிக்கான NTPC Graduate (CEN 04/2025) மற்றும் 12-ம் வகுப்பு தகுதிக்கான NTPC Undergraduate (CEN 03/2025) என தனித்தனியாக வெளியிடப்படும்.
இத்தேர்விற்கான தகுதிகள் என்ன?
டிக்கெட் கிளார்க், தட்டச்சர், ரயில் கிளார்க் ஆகிய பதவிகளுக்கு குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12-ம் வகுப்பு வரையே படித்தவர்கள் அதில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கும் மேல் படித்து இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 50% மதிப்பெண்கள் கட்டாயம் கிடையாது. தட்டச்சு பதவிகளுக்கு தட்டச்சு திறன் அவசியமாகும்.
டிக்கெட் மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் கணக்காளர் உடன் தட்டச்சர் மற்றும் சீனியர் கிளார்க் உடன் தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தேவை இருக்கும் பதவிகளுக்கு மட்டும் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு என்ன?
12-ம் வகுப்பு தகுதிக்கான பதவிகளுக்கு 18 முதல் 33 வயது வரை இருக்கலாம். பட்டப்படிப்பு தரத்திற்கு 18 முதல் 36 வரை இருக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், வயது வரம்பு விவரம் முழுமையாக தெரியவரும்.
சம்பளம் எவ்வளவு?
12-ம் வகுப்பு தகுதி பணியிடங்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.19,900 ஆகும். டிக்கெட் கிளார்க் பதவிக்கு ரூ.21,700 ஆகும். இதுவே, பட்டப்படிப்பு தகுதி பணியிடங்களுக்கு ரூ.29,200 ஆகும். இதில் டிக்கெட் மேற்பார்வையாளர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு ரூ.35,400 ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ரயில்வேயின் அறிவிப்பு வெளியான பின்னர் https://www.rrbchennai.gov.in/ என்ற சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்கலாம். ரயில்வே NTPC பணியிடங்களுக்கு 2 கட்ட கணினி வழியாக எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சாரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ரயில்வே பணிக்கு ஆர்வமுள்ளவர்கள், வயது வரம்பு மற்றும் முறையான கல்வித்தகுதி உடையவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க ஆவணங்களை தயாராக வைத்துகொள்ளலாம்.