மீனாட்சி ஸ்ரீனிவாசனின் அற்புத நடனத்தில் அதிர்ந்தது அரங்கம்..!

யக்ஷா கலைத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று (25/02/2025) கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் உலக புகழ் பெற்ற பரதக் கலைஞர் மீனாட்சி ஶ்ரீனிவாசன் அவர்கள் நிகழ்த்திய நடன நிகழ்ச்சியால் அரங்கம் ஆர்ப்பரித்தது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட டாக்டர் எஸ்.கே சுந்தரராமன், டாக்டர் வினு அறம் மற்றும் டாக்டர் தரணிபதி ராஜ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.
ஈஷா மைய வளாகத்தின் சூர்ய குண்ட மண்டபம் முன்பு நடைபெற்ற மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் 'பத்ம பூஷன்' திருமதி.அலமேலு வள்ளி அவர்களின் மாணவியான மீனாட்சி ஶ்ரீனிவாசன் அவர்களின் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பரதநாட்டியத்தில் பந்தநல்லூர் பாணியில் ஆடுவதில் தனித்துவம் பெற்றவர் இவர். இந்நிகழ்ச்சியில் அவருடன் வேதகிருஷ்ணராம், ஜெயஶ்ரீ, ஹரிபிரசாத் உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்று அசத்தினர்.
இந்த இசை நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பொதுமக்களும் ஈஷா தன்னார்வலர்களும் கண்டு ரசித்தனர். கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த யக்ஷா கலைத் திருவிழா இந்நிகழ்ச்சியுடன் நிறைவு கண்டது. மேலும் நாளை (பிப் 26) மாலை 6 தொடங்கி இரவு முழுவதும் இசை, நடனம், சத்குருவுடன் அருளுரை, சக்திவாய்ந்த தியானங்கள் என மஹாசிவராத்திரிக் கொண்டாட்டங்கள் ஈஷா யோகா மையத்தில் களைகட்ட உள்ளன.
நம் தேசத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பாரத கலாச்சாரத்தில் தோன்றிய பல விதமான கலைவடிவங்கள் இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து மறைந்து போய் வருகின்றன. இந்த கலை வடிவங்களின் தனித்தன்மை, புனிதம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாத்து வளர்ப்பதற்கான ஒரு முயற்சியாக ஈஷா ஒவ்வொரு வருடமும் யக்க்ஷா கலைத் திருவிழாவை நடத்துகிறது. கலை, இசை மற்றும் நடனத்திற்கான மூன்று நாள் திருவிழாவாக யக்ஷா நடைபெறுகிறது. இதில் தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் கலந்துக்கொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.