1. Home
  2. தமிழ்நாடு

சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை அத்தனையும் பொய்: கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய் பரபரப்பு பேட்டி..!

1

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகியதால், அந்த கை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து குழந்தையின் நிலை குறித்து அதன் பெற்றோரிடம் தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, விசாரணை அறிக்கையை மருத்துவர்கள் குழு, அரசிடம் சமர்ப்பித்தது.

இந்நிலையில், குழந்தையின் தாய் அஜிஸா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மருத்துவக் குழுவின் விசாரணை அறிக்கை எங்களுக்கு கையில் கிடைத்துவிட்டது. ஆனால், இந்த மருத்துவ அறிக்கையில் எங்களுக்கு துளிகூட திருப்தியே கிடையாது. ஏனென்றால், நாங்கள் கூறியது வேறு. நாங்கள் எழுதிக் கொடுத்த புகார் என்பது வேறு. ஆனால், மருத்துவக் குழு அறிக்கையில் வந்துள்ளது அதற்கு எதிர்மாறாகத்தான் வந்துள்ளது.

இந்த மருத்துவக் குழு அறிக்கையில் எதுவுமே சரியாக வரவில்லை. இதனால், இந்த அறிக்கையில் எங்களுக்கு எந்தவிதமான திருப்தியுமே இல்லை. இந்த அறிக்கையின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல, 3 பேர் கொண்ட விசாரணைக் குழு வைத்து எங்களை விசாரித்தனர். அது உண்மை நான் ஒப்புக்கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் தொடர்புடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்களிடம் எல்லாம் நாங்கள் விசாரிப்பதாக கூறியிருந்தனர். ஆனால், அந்த வார்டில் இருந்த மருத்துவர்கள் அனைவரையும் விசாரித்துள்ளனரே தவிர, என்னுடன் அந்த வார்டில் தங்கியிருந்த யாரிடமும் விசாரணை நடத்தவேயில்லை. காரணம், அங்கிருந்தவர்கள்தான் அனைத்துக்குமே சாட்சியானவர்கள். அவர்களை விசாரிக்காமல் விட்டுவிட்டனர்.

அதுபோல், என் குழந்தையை குறிப்பிட்டு தீவிர எடைக்குறைவு என்று கூறியுள்ளனர். பிறந்தது முதல் எடை குறைந்துகொண்டே வந்திருந்தால், அதை தீவிர எடைக்குறைவு என்று கூறலாம். ஆனால், என் குழந்தை பிறந்ததில் இருந்து எடை கூடிக்கொண்டுதானே வருகிறான். எனவே அது எப்படி தீவிர எடைக்குறைவாகும்.

மேலும், நான் என்றைக்கு மருத்துவர் செவிலியரால்தான் என் குழந்தையின் வலதுகை போய்விட்டது என்று இந்தப் பிரச்சினையை ஆரம்பித்தேனோ, அன்று முதல் என் குழந்தைக்கு இருதயக் கோளாறு இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால், இப்போது வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள என் குழந்தைக்கு எக்கோ உள்ளிட்ட சோதனைகளை செய்த மருத்துவர்கள் பாஸிட்டிவ் ரிசல்ட் கொடுத்துவிட்டனர். பையன் நல்லபடியாக இருக்கிறான். இருதயத்துக்கு எந்த கோளாறும் இல்லை என்று கூறியுள்ளனர்.

அப்படியென்றால், இந்த மருத்துவக் குழு அறிக்கையில் வந்துள்ள முடிவுகள் பொய்தானே? அப்படியென்றால் இதற்கு என்ன அர்த்தம்? இதைவிட அப்பட்டமான பொய், 29-ம் தேதியே குழந்தையின் கை சிவப்பாக மாறியாதாக தெரிந்துகொண்டோம் கூறியிருப்பது. காரணம், நேற்று வரை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட மருத்துவர்கள், சனிக்கிழமையன்றுதான், குழந்தையின் கை அழுகியதாக சொல்லியிருந்தார்கள். அப்படியென்றால், எதற்காக பொய் சொல்ல வேண்டும்" என்று அவர் கூறினார். 

Trending News

Latest News

You May Like