1. Home
  2. தமிழ்நாடு

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் : நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும்..!

1

மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996ம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்றதாக கூறி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல, எதிர்வரும் மக்களவை தேர்தலிலும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்தோம். அதன்மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மதிமுக தேர்தல் சின்னம் வழக்கில் இரண்டு வாரங்களில் முடிவெடுக்குமாறு கடந்த வாரம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், தேர்தல் மனு தாக்கல் நடைமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தங்கள் கோரிக்கை மனு மீது எந்த முடிவும் எடுக்கவில்லை, அதனால் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று மதிமுக சார்பில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று முறையீடு செய்யப்பட்டது. மதிமுக முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், நாளை (இன்று) தேர்தல் சின்னம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி உள்ளிட்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.எங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தேர்தல் ஆணையம். ஆனால் பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைவதால், எங்களின் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.இதற்கு பதில் அளித்து தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தனது வாதத்தில், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக அந்தத் தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பம்பரம் சின்னம் பொது சின்னங்களின் பட்டியலில் உள்ளதா இல்லையா என்று பிற்பகல் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு விட்டு வழக்கினை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர்.

இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  இவ்வழக்கில் மதிமுகவிற்கு பம்பர சின்னத்தை ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Trending News

Latest News

You May Like