மதிமுக - பாஜக கூட்டணியா? வைகோ பதில் இது தான்..!
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததை அடுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடன் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் குற்றவாளி சுர்ஜித் அவரது தந்தை ஆகியோரை விரைவாக கைது செய்த சம்பவத்தை முதல்வரிடம் சுட்டிக் காட்டினேன். கவினின் உடலை பெற மறுத்த பெற்றோரிடம் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் பேசி உடலை பெற்றுக் கொள்ள சம்மதிக்க வைத்தனர்.
இது போன்ற சம்பவங்களில் காவல் துறை நடவடிக்கை எடுத்தாலும் ஆணவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை தடுக்க கடமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இதனை திமுக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். முதல்வர் சுற்றுப் பயணத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கும். இதில், கூட்டணி அரசுக்கு என்ற வார்த்தைக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது. மகத்தான வெற்றியை எதிர் நோக்கி தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை நாம் சந்திப்போம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பூமியில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி வைத்து தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கிறது. இதனை தடுக்க வேண்டிய முழு பொறுப்பு திமுகவினருக்கு உள்ளது. இந்துத்துவா சக்திகளை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம். இந்த திட்டத்தை தகர்ப்போம், தவிடு பொடி ஆக்குவோம். இதற்காகவே எனது இயக்கத்தை திமுகவுடன் இணைத்து கொண்டோம். இந்த நிலைப்பாடு எப்போதும் தொடரும். தமிழகத்தில் எந்தக் கட்சியும் விமர்சிக்காத அளவுக்கு பாஜகவையும், ஆர்எஸ்எஸ்-யும் விமர்சித்து வருகிறேன். அப்படி இருக்கையில் நான் எப்படி பாஜக அதிமுக கூட்டணிக்கு செல்வேன். அந்த நிலைப்பாட்டில் எந்த காலத்திலும் மாறுதல் வராது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்ததை அடுத்து திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறும் என்றும், பாஜகவுடன் கூட்டணி வைப்பார்கள் என்றும் பல கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தது. இது உண்மைக்கு புறமானது. எந்தக் காலத்திலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உடன் மதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.