மாசி மகம் 2024... இன்று இதை செய்தால் பாவங்கள் விலகுமாம்..!

மாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று மாசிமகம். பொதுவாக நம்முடைய பாவங்களை போக்கிக் கொண்டு, புண்ணிய பலன்களை பெறுவதற்காகவே கோவில்களில் குளங்கள், தீர்த்தங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. அதனாலேயே புனித நீராடல் என்ற ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. அதிலும் சில குறிப்பிட்ட நாட்களில் புனித நீராடுவது மிக அதிகமான பலன்களை தரும். அப்படி ஒரு அதிகமான புண்ணிய பலன்களை தரக் கூடிய நாள் தான் மாசி மகம். இந்த நாளில் புனித நீராடினால், புண்ணிய நதிகளில் நீராடிய பலன்களையும், பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணிய பலன்களை பெறுவதற்கான பலன்களையும் பெற முடியும்.
உலகில் உள்ள அனைவரும் அவர்களின் பாவங்களை போக்கிக் கொள்ள தங்களில் வந்து நீராடுகிறார்கள். ஆனால் தங்களின் பாவங்களை எப்படி போக்கிக் கொள்வது என பஞ்ச நதிகளால் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, காவிரி ஆகிய நதிகளும் தங்களுக்குள் பேசிக் கொண்டு, அதற்கு தீர்வு பெற சிவ பெருமானிடம் சென்றன. அந்த நதிகளின் கோரிக்கையை ஏற்ற சிவ பெருமான், புண்ணிய நதிகளின் பாவங்களை போக்கி, அவற்றின் புனிதத் தன்மையை புதுப்பித்துக் கொள்வதற்காக கும்பகோணம் மகாமகம் குளத்தில் சென்று நீராடும் படி கூறினார். அப்படி அவர் புனித நீராட சொன்ன நாள் தான் மாசி மகம். கும்பகோணம் மகாமகம் குளத்தில் எத்தனையோ தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் மாசி மகம் அன்று புனித நீராடினால், புண்ணிய பலன்களும், புனித நதிகளில் நீராடிய பலன்களும் கிடைக்கும்.
அன்னை பராசக்தி, தாட்சாயணியாக அவதரித்ததும், சிவ பெருமான் வருண பகவானுக்கு சாப விமோசனம் அளித்ததும் மாசிமகம் திருநாளில் தான். அதனால் மாசிமகம் அன்று புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணிய பலன்கள் கிடைக்கும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது, தான தர்மங்கள் செய்வது ஆகியனவும் அளவில்லாத பலன்களை தரும். அதே போல் மாசிமகம் அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. இதுவரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க தவறி இருந்தாலும், அப்படி தர்ப்பணம் கொடுக்கும் போது ஏதாவது தவறு செய்திருந்தாலும் அதனால் ஏற்பட்ட பாவங்கள், தோஷங்கள் நீங்கவும் மாசிமகம் அன்று புனிதநீராடலாம்.
மாசிமகம் அன்று கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு சென்று நீராட முடியாதவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று நீராடலாம். இது எதற்கும் வாய்ப்பு இல்லாதவர்கள், வீட்டில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். எவர்சில்வர் அல்லாத வேற எந்த உலோகத்தால் ஆன பாத்திரத்தையும் பயன்படுத்தலாம். மண் பாத்திரத்தை கூட பயன்படுத்தலாம். அதில் தண்ணீர் நிரப்பி, வீட்டில் கங்கை நீர் அல்லது ஏதாவது தீர்த்தம் இருந்தாலும் கலந்து வைக்கலாம். அதோடு சிறிதளவு மஞ்சள்தூள், திரவியப்படி பொடி இருந்தால் அதையும் சிறிது சேர்த்து, வீட்டின் பூஜை அறையில் வைத்து, கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளின் பெயர்களை சொல்லி, "அங்கு வந்து எங்களால் நீராட முடியாது. அதனால் இந்த தண்ணீரில் நீங்கள் எழுந்தருளி எங்களுக்கு ஆசி வழங்கி, எங்களின் பாவங்களை போக்கி அருள வேண்டும்" என வேண்டிக் கொண்டு, குளிக்கும் தண்ணீரில் அந்த தீர்த்தத்தில் சிறிது கலந்து குளிக்கலாம். அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து விடலாம்.
மாசிமகம் அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற நாளாகும். குழந்தை இல்லாத தம்பதிகள் முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு நாள் முழுவதம் உபவாசமாக இருந்து விரதம் இருக்கலாம். திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருப்பவர்கள் அம்பிகையை வேண்டி, காலையில் அம்பிகைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்து வர வேண்டும். பெருமாளுக்கு அன்றைய தினம் மாலையில் சத்யநாராயண பூஜை செய்து வழிபடலாம். சிவ பெருமானை மனதார நினைத்து வழிபடலாம். இந்த நாளில் குலதெய்வத்திற்கும் பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது.
இந்த மாசிமகம் மார்ச் 12ம் தேதி புதன்கிழமை வருகிறது. வழக்கமாக மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரும் நாளையே மாசிமகமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி தான் பெளர்ணமி வருகிறது. மார்ச் 12ம் தேதி அதிகாலை 03.53 மணி துவங்கி, மார்ச் 13ம் தேதி காலை 05.09 வரை மகம் நட்சத்திரம் உள்ளது. அதே சமயம் மார்ச் 13ம் தேதி காலை 11.40 மணிக்கு துவங்கி, மார்ச் 14ம் தேதி பகல் 12.57 வரையிலும் பெளர்ணமி திதி உள்ளது. அதனால் சத்யநாராயண பூஜை செய்பவர்கள் மார்ச் 13ம் தேதி மாலையில் செய்வது சிறப்பு. மாசிமகம் அன்று நீர்நிலைகளுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பானதாகும்.