1. Home
  2. தமிழ்நாடு

14 ஆண்டுகளுக்கு பிறகு மாசாணியம்மன் கோவில் குடமுழுக்கு..!!

1

முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் என்ற முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சத்திரிய வம்சமான அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான அவர் அரச குடும்ப வாழ்க்கையை துறந்து, துறவறம் மேற்கொண்டார். துறவியான விசுவாமித்திரர் பல தவங்கள் செய்து பல்வேறு வரங்களை பெற்றார். ராஜரிஷி பட்டம் பெற்ற அவர் ஒருமுறை கடக நாச்சிமலை என்ற இடத்திற்கு சென்று மலையின் மேல் அமர்ந்து சிவனை நோக்கி தவம் இருக்க நினைத்தார். ஆனால் கடக நாச்சிமலையில் தாடகை என்ற அரக்கி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இலங்கேஸ்வரன் ராவணனின் அபாய சக்திகளை பெற்றவள். பல வரங்கள் பெற்று அதை தீய வழியில் செலுத்தி வந்தாள். அந்த மலையில் விசுவாமித்திரர் தவம் செய்து முடிக்க அவளால் ஏதேனும் தடை ஏற்படும் என எண்ணினார். ஆதலால், தசரதன் மகன்களான ராமர், லட்சுமணர் இருவரையும் அழைத்து வந்தார். அவர்களும் சம்மதித்து அரக்கியை சமாளிக்க ஈஸ்வரியை வேண்டி வரம் கேட்டனர். அதற்கு ஏற்ப ஈஸ்வரியும் அந்த அரக்கியை அழிக்க வழி கூறினார். அரக்கியை அழிக்கப்போகும் முன் மண்ணாலான ஈஸ்வரியை வடித்து, பூஜை செய்து வழிபட்டு, அந்த வடிவத்தை அழித்துவிட வேண்டும் என்றார்.

அதை ஏற்று பூஜை செய்த ராமர் அதை அழிக்க மறந்துவிடுகிறார். அரக்கியை அழித்த பின் நினைவு வந்ததும் அந்த வடிவத்தை அழிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, அவ்வடிவம் இன்று முதல் என் பிரதிநிதியாக இருந்து இவ்வூரில் உள்ளது. அவ்வாறு அமைத்த தெய்வமே மாசாணி அம்மன். ஈஸ்வரியின் மறுவடிவமாக உள்ள மாசாணி அம்மன் வேண்டுவோருக்கு வேண்டுவன தரும் அன்பு தெய்வமாக, கொங்கு நாட்டு காவல் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். ஆனைமலை ஆழியாற்றங்கரையில் மாசாணியம்மன் கோவில் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா,கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

 

இங்கு, செவ்வாய்,வெள்ளிமற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும்.இந்நிலையில்,ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை இந்தாண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக கோவில் கோபுரங்களின் புனரமைப்பு பணிகள் முடிவடைந்து வர்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 12-ம் தேதி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் கூறுகையில்: கோவை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவுற்றதால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் சேகர்பாபுவின் உத்தரவின் பேரில், தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசப்பட்டு மகா கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது.இதையடுத்து வரும் டிசம்பர் 12ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அன்று காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகா கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சியில் முழு விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற உள்ளது\” என்றார்.

Trending News

Latest News

You May Like