இன்று மாலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது மெரினா நீச்சல் குளம்!
சென்னை மாநகராட்சி பராமரிப்பில் மெரினா மற்றும் பெரியமேடு மை லேடி பூங்கா ஆகிய இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாரிடம் வழங்கப்பட்டு வந்தது. இங்கு கட்டண அடிப்படையில் பொதுமக்கள் நீச்சல் அடிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனிடையே, நீச்சல் குளங்களை தனியார் முறையாக பராமரிக்கவில்லை, கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என புகார்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு நீச்சல் குள பணியாளரின் கவனக்குறைவால் மை லேடி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். அதனைத் தொடர்ந்து, இந்த நீச்சல் குளங்களில் பொதுமக்கள் நீச்சலடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் மெரினாவில் உள்ள நீச்சல் குளம் பராமரிப்பின்றி கிடந்தது. அண்மையில் மெரினா கடற்கரையை தூய்மைப் படுத்தும் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மெரினா நீச்சல் குளத்தை பார்வையிட்டார். அதை உடனே சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றன.நீச்சல் குளத்தில், சுத்தமான தண்ணீர் தடையின்றி வருவதற்கான ஏற்பாடுகள், நீச்சல் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வசதிகள், கழிவறை, உடை மாற்றும் அறைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.மின் விளக்கு வசதி, குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெரினா நீச்சல் குளம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் மெரினா நீச்சல் குளம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று மாலை 6 மணிக்கு திறந்து வைக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.