மறைமலை அடிகளாரின் 148-வது பிறந்த நாள் : செங்கல்பட்டில் தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை..!
தனித்தமிழ் இயக்கத்தந்தை மறைமலை அடிகளாரின் 148-வது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையன்று அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மலர் வணக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
தமிழகப் புலவர் பெருமக்களுள் மறைத்திரு மறைமலையடிகளார், தனித்தமிழ்த் தந்தையாக மட்டுமின்றித் தனித்திறம் படைத்த பல்கலைப் பேரறிஞராக விளங்கினார். தமிழ்க்கடல், தனித்தமிழின் தந்தை என்றெல்லாம் தமிழுலகத்தால் போற்றப்பட்டவர் மறைமலையடிகள் ஆவார்.
தவத்திரு மறைமலையடிகள் 1876-ம் ஆண்டு ஜூலை 15-ம் நாள் நாகைப்பட்டினத்தில் பிறந்தார். அவரது 148-வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பல்லவபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு இன்று திங்கட்கிழமையன்று காலை 10.30 மணிக்குத் தமிழக அரசின் சார்பில் மலர் வணக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், தாம்பரம் மாநகராட்சி மேயர், தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)