ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் இழப்பு.. மனைவிக்கு உருக்கமான ஆடியோ வெளியிட்டு இளைஞர் சோக முடிவு !
ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் இழப்பு.. மனைவிக்கு உருக்கமான ஆடியோ வெளியிட்டு இளைஞர் சோக முடிவு !

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு கிராமத்தில் விஜயகுமார் (வயது 36) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மதுமிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்த விஜயகுமாருக்கு ஆன்லைன் கேமில் நாட்டம் ஏற்பட்டது.
தொடக்கத்தில் விஜய குமார் வெற்றி பெற்று பணம் சம்பாதித்ததால் சூதாட்டத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதனை விளையாடி வந்ததில் சிறுகச்சிறுக பணத்தை இழந்தார். ஒரு கட்டத்திற்கு சூதாட்டத்தில் இருந்து வெளியே வர முடியாமல் அடிமையானார்.
இழந்த பணத்தை மீட்க வேண்டும் என சூதாட்ட வெறியில், மனைவியின் நகைகளை அடகு வைத்தும் மற்றும் வியாபாரத்திற்கு வைத்திருந்த பணத்தையும் இழந்தார். மேலும் பலரிடம் கடன் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டார். அந்த வகையில் பல லட்சம் ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் விஜயகுமார் இழந்தார்.
இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். பணம் இல்லாததால் தொழிலை சரியாக நடத்த முடியவில்லை. வீட்டிலும் வருமானம் இல்லாததால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனே மனைவியிடம் கோபித்துகொண்டு விஜயகுமார் வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். மேலும் அவரது செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியாததால் அவரது மனைவி மதுமிதா கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.
அப்போது கோர்க்காடு அருகே உள்ள நத்தமேடு ஏரிக்கரையில் ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தப்போது சடலத்தின் அருகில் பைக் ஒன்று நின்றது.
அதனுடைய பதிவு எண் கொண்டு விசாரித்தபோது, அது விஜயகுமாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. எனவே எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது விஜயகுமார் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதன்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் அவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும் விஜயகுமார், கடைசியாக தனது செல்போனில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு பதிவிட்டு இருந்தார். அவரது மனைவிக்கு கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப்பில், என்னுடைய பிணத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் நிற்கும் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
விஜயகுமார், தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக, அவர் பேசிய ஆடியோவில், குடும்பத்தை பார்த்துக்கோ என்று தனது மனைவிக்கு அதை மட்டும் பல முறை கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் சூதாட்டத்தை யாரும் விளையாட வேண்டாம் என்ற பொதுத் தகவலையும் பதிவிட்டுச் சென்றுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையில் வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in