1. Home
  2. தமிழ்நாடு

மனோகர் ஜோஷி காலமானார் : பிரதமர் மோடி இரங்கல்..!

1

சிவசேனா-பா.ஜ.க.கூட்டணி பதவியேற்ற போது முதல்வராக பதவியேற்றவர் மனோகர் ஜோஷி. 86 வயதாகும் மனோகர் ஜோஷிக்கு நேற்று முன் தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை பாந்த்ராவில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 

மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நந்தவி கிராமத்தில் 1937 டிசம்பர் 2ஆம் தேதி பிறந்தார் மனோகர் ஜோஷி.. 1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராட்டிய மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மனோகர் ஜோஷி.

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அவைகளுக்கும் தேர்வானவர் மனோகர் ஜோஷி. 1972 முதல் 1989 வரை மராட்டிய மாநில சட்ட மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். கடந்த 1990 முதல் 1999 வரை மராட்டிய மாநில சட்டசபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 2002-2004 வரையிலான காலகட்டத்தில் மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தார். 2006-2012 வரை மாநிலங்களவை உறுப்பினராக மனோகர் ஜோஷி பதவி வகித்துள்ளார்.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அதனால் தான் பதவியை ராஜினாமா செய்யும்படி பால் தாக்கரே சொன்ன அடுத்த நிமிடமே முதல்வர் பதவியில் இருந்து மனோகர் ஜோஷி விலகினார். மகாராஷ்டிராவில் ஆரம்பகாலத்தில் பாஜக சிவசேனாவின் உறவுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மனோகர் ஜோஷி.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இரண்டு நாள்கள் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். மனோகர் ஜோஷி காலமான செய்தியை கேள்விப்பட்டதும் உத்தவ் தாக்கரே தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு மும்பை திரும்பியுள்ளார்.சிவசேனா தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மறைந்த மனோகர் ஜோஷிக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் மனோகர் ஜோஷி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மனோகர் ஜோஷியின் மறைவு வேதனை அளிக்கிறது. மூத்த தலைவரான அவர், பல ஆண்டுகளாக பொது சேவையில் இருந்தார். மேலும், நகராட்சி, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

மராட்டிய முதல்-மந்திரியாக இருந்த அவர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார். மத்திய மந்திரியாகவும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். மக்களவை சபாநாயகராக அவர் பதவி வகித்த காலத்தில், நமது நாடாளுமன்ற செயல்முறைகளை மேலும் துடிப்பு மிக்கதாக மாற்ற பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி" என்று தெரிவித்துள்ளார்.

 


 

Trending News

Latest News

You May Like