1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவை பொருளாதார சுனாமியில் இருந்து மீட்டெடுத்தார் மன்மோகன் சிங்..! எப்படி தெரியுமா ?

1

தற்போது ஆளும் மத்திய பாஜக அரசு ஒரே இரவில் அறிவித்தது போல் இல்லாமல் இரண்டு கட்டமாக பண மதிப்பிழப்பு (De Monetization) திட்டமிட்டு நடத்தபட்டது. முதலில் 1 ஜூலை 1991 அன்று முக்கிய சர்வதேச நாணயங்களுக்கு எதிராக சுமார் 9 சதவிகிதம் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் 11 சதவீதம் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இந்திய ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் செய்யப்பட்ட இந்த நடவடிக்கை பெரும் பயனை கொடுத்தது.

மத்திய ரிசர்வ் வங்கி ஜூலை 1991 வரை நான்கு தவணைகளில் பாங்க் ஆஃப் இங்கிலாந்திடம் இந்தியாவின் கையிருப்பில் அரசு கருவூலத்தில் சும்மாவே இருந்த தங்கத்தை அடகு வைத்து, அதன் மூலம் சுமார் 400 Million அமெரிக்க டாலர்களை திரட்டியது. இது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அவசரகாலக் கடன்களைப் பெற மிகவும் உதவியது.

ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசாங்கம் புதிய வர்த்தகக் கொள்கையை அறிவித்தது. இறக்குமதிகளை ஊக்கப்படுத்த, அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை குறைத்து ஏற்றுமதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பண மதிப்பிழப்பு மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிந்ததால் ஏற்றுமதிகள் அதிகரித்தன. இதை கருத்தில் கொண்டு ஏற்றுமதிக்காக கொடுக்கப்பட்டு வந்த மானியங்களை அரசாங்கம் ரத்து செய்தது. ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களின் பயன்பாட்டிற்காக எக்ஸிம் ஸ்கிரிப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்தகைய ஸ்கிரிப்கள் ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில் கணக்கிடப்பட்டன. இந்தக் கொள்கையானது, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மூலம் இறக்குமதியை வழிப்படுத்த வேண்டிய தேவையையும் நீக்கியது. தனியார் துறை சொந்தமாக இறக்குமதிகளை செய்யவும் அனுமதிக்கப் பட்டது.

புதிய தொழில்துறை கொள்கை

புதிய தொழில்துறை கொள்கை 1991 பட்ஜெட்க்கு முன்னதாக வெளியிடப்பட்டது. இந்த புதிய தொழில்துறை கொள்கை, இந்தியாவில் அதுவரை நடைமுறையில் இருந்து வந்த மிகப்பெரும் ஊழலுக்கு காரணமாக இருந்த " லைசென்ஸ் ராஜ் " நடைமுறையை முழுமையாக ஒழித்து கட்டி, இந்தியா தனது தொழில்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை லாபகரமாக நடத்தும் விதத்தில் பெரிய மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய வர்த்தக நடைமுறைகள் சட்டத்தில் உள்ள விதிகளை இந்த புதிய தொழில்துறை கொள்கை தளர்த்தியது. இந்த புதிய தொழில்துறை கொள்கையானது பல துறைகளில் பொதுத்துறையின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. மேலும் அன்னிய முதலீடுகளுக்கான உச்ச வரம்பான 40 சதவீதத்தை 51 சதவீதம் வரை உயர்த்தி அன்னிய நேரடி முதலீட்டிற்கான (Foreign Direct Investment) ஒப்புதல் கொள்கையையும் அறிவித்தது.

தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் முக்கியமான சில துறைகளில் மட்டும் பொதுத்துறையின் முதலீட்டின் ஆதிக்கம் அனுமதிக்கப்பட்டது. முதலீட்டின் அளவைப் பொருட்படுத்தாமல் 18 தொழில்களைத் தவிர அனைத்துத் தொழில்களுக்கும் அத்தியாவசிய தேவையாக இருந்த தொழில்துறை உரிமத்தையும் இந்த புதிய தொழில்துறை கொள்கை ரத்து செய்தது. வர்த்தக கொள்கையில் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள் அனைத்தும் இந்தியாவில் அந்நிய நிறுவனங்கள் வணிகம் செய்வதை எளிதாக்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில்பெருமளவில் குவிய வழி செய்து இந்திய பொருளாதாரத்தை மிக வேகமாக உயர்த்தி வலுவாக்கியது.

பட்ஜெட் 1991-92

ஜூலை 24 அன்று மன்மோகன் சிங்கால் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தக சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த பட்ஜெட் இருந்தது. சில கடினமான நடவடிக்கைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த பட்ஜெட், கார்ப்பரேட் வரி விகிதங்களை 5 சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக உயர்த்தியது. வங்கி வைப்பு போன்ற சில நிதி பரிவர்த்தனைகளுக்கு வரி விலக்கு போன்ற சலுகைகளை அறிவித்தது.

சமையல் காஸ் சிலிண்டர்கள், உரங்கள், பெட்ரோல் ஆகியவற்றின் விலையை உயர்த்தியதுடன், சர்க்கரைக்கான மானியத்தையும் இந்த பட்ஜெட் நீக்கியது. இந்த பட்ஜெட் பரஸ்பர நிதிகளை தனியார் துறைக்கு திறந்து விட்டு வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீட்டிற்கான விதிகளை தளர்த்தியது. மக்கள் கணக்கில் வராத சொத்துக்களை தாமாகவே அறிவிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கும் மக்களுக்கு வழக்கு விசாரணை மற்றும் வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

பட்ஜெட்டுக்குப் பிறகும் மன்மோகன் சிங் அவர்களின் சீர்திருத்தங்கள் தொடர்ந்தன. அடுத்த எட்டு மாதங்களில், சீர்திருத்தங்களின் வேகத்தைத் தொடரவும், பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவை வெளிக்கொண்டு வரவும் மன்மோகன் சிங் மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தார். ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக ஏற்றுமதியாளர்களுக்கான இரண்டாவது நிதி தொகுப்பும், சிறு நிறுவனங்களை வளர்ப்பதற்கு அறிவிக்கப்பட்ட நிதி தொகுப்பும் இதில் அடங்கும்.

மேலும் புதிய நிதித்துறை சீர்திருத்தங்களை கண்டறிந்து அரசுக்கு அறிவுறுத்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் எம். நரசிம்மம் தலைமையில் ஒரு குழுவையும் அரசாங்கம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, நன்கு அறியப்பட்ட பொருளாதார நிபுணர் ராஜா செல்லையாவின் கீழ் வரிச் சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது.

2006-2007ல் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தின் கீழ் இந்தியா அதன் அதிகபட்ச GDP வளர்ச்சி விகிதமான 10.08% வளர்ச்சி விகிதத்தை எட்டி உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறியது.1991 இல் மன்மோகன் சிங் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின் இதுவே இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஜிடிபி ஆகும்.

வாஜ்பாய் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தங்க நாற்கர சாலை மற்றும் நெடுஞ்சாலை நவீனமயமாக்கல் திட்டத்தை மன்மோகன் சிங்கின் அரசாங்கம் தொடர்ந்தது. மன்மோகன் சிங்கின் கீழ் நிதியமைச்சகம் அதிகரித்து வரும் விவசாயிகளின் கடனில் இருந்து அவர்களை விடுவிக்கவும், தொழில்துறைக்கு ஆதரவான கொள்கைகளை உருவாக்கவும் தீயாக வேலை செய்தது. 2005 இல், சிங்கின் அரசாங்கம் அன்று வரை இருந்த சிக்கலான விற்பனை வரிக்குப் பதிலாக இன்று நடைமுறையில் உள்ள VAT வரியை அறிமுகப்படுத்தியது.

பிரதம மந்திரி மன்மோகன் சிங்கின் தலைமையின் கீழ், சிறப்புப் பொருளாதார மண்டல (SEZ) சட்டம் 2005 இயற்றப்பட்டு , 23 ஜூன் 2005 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. இந்தச் சட்டம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) விதிகள் 2006 உடன் 10 பிப்ரவரி 2006 அன்று நடைமுறைக்கு வந்தது. அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை உருவாக்குவதன் மூலமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உந்துதலாக இருக்கும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (NREGA) சட்டம் 2005:

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 2005 இல் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (NREGA) அறிமுகப்படுத்தியது, இது இந்தியாவில் உள்ள கிராமப்புற சமூகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம், வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.

ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 100 நாட்கள் திட்டவட்டமான ஊதிய வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு வருமான பாதுகாப்பை NREGA உறுதி செய்கிறது. இந்த ஊதிய வேலைத் திட்டம் திறமையற்ற உடல் உழைப்புக்கு முன்வந்த பெரியவர்களுக்குக் கிடைக்கும். 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியா முழுவதும் 200 மாவட்டங்களில் NREGA ஒரு இந்திய தொழிலாளர் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஏப்ரல் 2008 இல், இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) என மறுபெயரிடப்பட்டபோது மேலும் பல மாவட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஆகியோரின் கூட்டறிக்கையில் அறிவிக்கபட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது சிவில் மற்றும் இராணுவ அணுசக்தி நிலையங்களை முறையாக அடையாளம் கண்டு தார்வாரியாக பிரித்து வகைப்படுத்த ஒப்புக்கொண்டது. சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கீழ் மேற்பார்வை செய்யப்படும் இந்த ஒப்பந்தம் ஜூலை 18, 2005 அன்று கையெழுத்தானது.

இப்படியாக டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பல பொருளாதார மற்றும் வர்த்தக சீர்த்திருத்தங்கள் இலங்கையை போல திவாலாகி போகும் அளவுக்கு அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டு இருந்த இந்திய பொருளாதாரத்தில் மிக பெரும் ஏற்றத்தை கொண்டுவந்து அதை மேலும் வலுவான பொருளாதாரமாக மாற்றியது. இப்படிப்பட்ட சீர்த்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து இந்தியாவை திவால் ஆகும் நிலையில் இருந்து மீட்டெடுத்து இந்திய பொருளாதாரத்தை ஒரு சூப்பர் பொருளாதாரமாக மாற்றி கட்டமைத்த திரு மன்மோகன் சிங் அவர்களை " இந்திய பொருளாதாரத்தை மறுசீரமைத்த சூப்பர் மேன் " என்றே கூற வேண்டும்.

மன்மோகன் சிங் அவர்களின் பொருளாதார சீர்த்திருத்தங்களை பற்றியும் மேலும் அறிய கீழ்கண்ட புத்தகங்களை படியுங்கள் :

1) 1991 How P. V. Narasimha Rao Made History - By Sanjaya Baru

2) An Economist in the Real World - Dr. Manmohan Singh - By Kaushik Basu

3) Dr. Manmohan Singh - A Tempestuous Tenure - By Sujay Shastri

4) How P V Narasimha Rao Transformed India - By Vinay Sitapati

5) Making and Unmaking of Manmohan Singh - By Sanjaya Baru

6) To the Brink and Back India`s 1991 Story - By Jairam Ramesh

Trending News

Latest News

You May Like