மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் மணிகண்டன்..!

நடிகர் மணிகண்டன் ஆரம்பத்தில் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். பின்னர் 2015-ம் ஆண்டு வெளியான 'இந்தியா பாகிஸ்தான்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'ஜெய்பீம்' படத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றார். இவர் நடிப்பு மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர், டப்புங் ஆர்ட்டிஸ்ட், துணை இயக்குனர் என பல துறைகளிலும் மணிகண்டன் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், இவர் 2016-ம் ஆண்டு 'நரை எழுதும் சுயசரிதை' என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் டெல்லி கணேஷும் இவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் விருதுகள் பல வென்றுள்ளது. அதன் பின்னர் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினார் மணிகண்டன்.
இந்த நிலையில் மணிகண்டன் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை இயக்குனர் காயத்ரி உறுதிபடுத்தியுள்ளார். அதாவது, மணிகண்டன் ஒரு புதிய படத்திற்கான கதையை தயாராக வைத்துள்ளதாகவும், அதனை அவரே இயக்கி நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.