மணிசங்கர் அய்யர் கருத்தால் சர்ச்சை..! தேர்வில் பெயிலாகி பிரதமரானவர் ராஜிவ்..!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் சர்ச்சைக்கு சொந்தக்காரர். அவர் அவ்வபோது தெரிவிக்கும் கருத்துகள், காங்கிரசுக்கு எதிராகவே திரும்புவது வாடிக்கை. இதனையடுத்து கட்சி தலைவர்கள் அவரை கண்டித்துள்ளனர். தற்போது, கட்சியிலும் எந்த பதவியிலும் இல்லாத அவர் அடிக்கடி பேட்டி கொடுத்து வருகிறார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் உள்ள சர்வதேச புகழ் பெற்ற டூன் பள்ளியில் மணிசங்கர் அய்யரும், ராஜிவும் கிளாஸ்மேட்ஸ். ஒரே வகுப்பில் படித்தவர்கள்.நீண்ட காலமாக நெருக்கமான நண்பர்கள். தற்போது ராஜிவ் குறித்து மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டியை வைத்து காங்கிரசை பா.ஜ., விமர்சித்து வருகிறது.
வீடியோவில் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளதாவது: ராஜிவ் பிரதமர் ஆக பதவியேற்ற போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் விமானபைலட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் படித்து பெயிலானவர் என நினைத்தேன். இந்த பல்கலையில், பெயில் ஆவது என்பது கடினம். அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெறுவதை பல்கலை உறுதி செய்யும். ஆனால், அதனையும் மீறி ராஜிவ் பெயில் ஆனார். இதன் பிறகு லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரிக்கு சென்ற அவர், மீண்டும் பெயில் ஆனார். இதனால், அவரைப் போன்றவர் எப்படி மீண்டும் பிரதமர் ஆக முடியும் என எனக்கு ஆச்சர்யமாக இருந்தது எனக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரசின் தாரிக் அன்வர் கூறியதாவது: பெயிலாவது பெரிய விஷயம் அல்ல. சிறந்த நபர்கள் கூட சில முறை பெயிலாகி உள்ளனர். ஆனால், ராஜிவ் அரசியலில் பெயிலாக வில்லை. பிரதமர் ஆக அவர் சிறந்த வெற்றியை கொடுத்துள்ளார். அவர் தான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அறிமுகம் செய்தார். தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வந்தார். தகவல் தொடர்பை மேம்படுத்தினார். அறிவியல் வளர்ச்சியை ஊக்கப்படுத்தினார். ஐந்தாண்டுகளில்இதுபோன்ற சாதனையை படைத்தவர்கள் வெகு சிலரே. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் சரண் சிங் சப்ரா கூறியதாவது: காங்கிரசின் மூத்த தலைவரும், நீண்ட காலமாக கட்சியுடன் மணிசங்கர் அய்யர் தொடர்பில் உள்ளார். ஆனால், பல ஆண்டுகளாக அவரின் கருத்துகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. செய்திகளில் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்பதற்காக, அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து தெரிவிப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளார். கட்சி அவரை எம்.பி., ஆக்கிய போது, ராஜிவை பற்றி அவர் தெரிந்து வைத்திருக்கவில்லையா? அவர் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். தேர்தலில் தோல்வியடைந்த போதும், அவரை சோனியா தான் ராஜ்யசபாவிற்கு அனுப்பி வைத்தார். அவரின் அறிக்கைகள், அவர் பா.ஜ.,வின் ஸ்லீப்பர் செல்லோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. பொய் பிரசாரம் மேற்கொள்ள பா.ஜ., அவரை பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் உள்ளது. அவரை பொது மக்கள் நம்பக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். மணிசங்கர் அய்யரின் இந்த பேட்டியை பார்த்து, காங்கிரசார் அவரை விமர்சித்து வருகின்றனர்.