1. Home
  2. தமிழ்நாடு

"மங்களம் யானை" தமிழ்நாட்டின் சிறந்த கோயில் யானையாக தேர்வு!

1

கும்பகோணத்திற்கு செல்லும் பொதுமக்கள் பலரும் கோயில்களை தரித்துவிட்டு மறக்காமல் செய்யும் விஷயம் ஒன்று உள்ளது. மங்களம் என்ற அந்த யானையை ஒரு முறை பார்த்துவிட்டு வரவேண்டும், அதன் குறும்புத்தனங்களை விடியோவாகவோ, போட்டோவாகவோ எடுத்துவிடவேண்டும் என்பது தான்.

தனது பாகனுடன் சேர்ந்து பல சேட்டைகள் செய்து மக்கள் பலரையும் கவர்ந்து வைத்துள்ளது கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானை மங்களம். இந்த யானையை கடந்த 1982ம் ஆண்டு காஞ்சி மகாபெரியவர் வழங்கியுள்ளார். தற்போது மங்களத்திற்கு 56 வயது ஆகிறது. தினமும் சத்தான உணவுகள், உடற்பயிற்சிகள் என 'ஹெல்த் கான்சியஸ்' உடன் இருக்கும் மங்களம் செய்யும் சேட்டைகள் காண்போரை கவர்ந்திழுக்கும். பாகன் அசோக் தான் மங்களத்திற்கு ஆஸ்தான 'பார்ட்னர்' குறும்புகள் செய்வது, பாகனுடன் சேர்ந்து விளையாடுவது, செல்போனில் வீடியோ பார்ப்பது என்று அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் மங்களத்தை புகழடையச் செய்தன. 

இத்தகைய சிறப்பு பெற்ற யானை மங்களத்திற்கு, சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருதை, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற புதுடெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் சார்பில் நேற்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன், அஜீத் குமார் ஆகியோர் கோயில் செயல் அலுவலர் கோ.கிருஷ்ணக்குமார் மற்றும் யானை மங்களம் பராமரிப்பாளரும், பாகனுமான அசோக்கிடம் நினைவுப் பரிசு மற்றும் விருதுகளை வழங்கினர்.

இந்த அமைப்பு தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேவிற்கொண்டு, 34  யானைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் யானை மங்களம் என தெரியவரவே, "சுறுசுறுப்பான யானை" என்ற விருதை வழங்கியுள்ளது.

யானையை சிறப்பாக பராமரித்தல், தூய்மையான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சுற்றுப்புறம் உள்ளிட்ட காரணிகளும் விருது தகுதிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன.

Trending News

Latest News

You May Like