ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் - புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு..!
ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். 19 அன்று விடுமுறை இல்லை என முன்கூட்டியே தெரிந்தால் தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண் மூலம் ஊழியர்கள் புகார் அளிக்கலாம். ஏப்ரல் 18 அன்றே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏப்ரல் 17 மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் ஓட்டளிக்கலாம்” என்றார்.
முன்னதாக தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களான தினக் கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது.