விமான நிலையத்திற்குள் 4 மணிநேரம் சுற்றித் திரிந்த ஆசாமி- 7 அடுக்கு பாதுகாப்பை மீறியது எப்படி..?

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் இருக்கும் ஏழாவது எண் நுழைவுவாயிலில் மாலை 6 மணிக்கு இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார்.
அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையில் எந்தவிதமாகவும் சோதனை நடத்தவில்லை. உள்ளே நுழைந்த இளைஞர் சுங்கச் சோதனை கவுண்டர், குடியுரிமை சோதனை கவுண்டர் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போதும் அவரை மத்திய பாதுகாப்பு படையினர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இரவு 10 மணியான போது அந்த இளைஞர் குடியுரிமை அலுவலக கவுண்டரில் இருந்த ஊழியர் ஒருவரில் செல்போனை திருட முயன்றுள்ளார். உடனடியாக அவரை பிடித்து தர்ம அடி கொடுத்த ஊழியர்கள் விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர். அவரைப் பிடித்து விசாரித்ததில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பது தெரியவந்தது.
இலங்கையில் இருந்து சென்னைக்கு கடந்த மே மாதம் வந்துள்ள தினேஷ் ஞானசூரியன், எழும்பூரில் தங்கியுள்ளார். எதற்காக சென்னை வந்தார் என்பது தெரியவில்லை? எந்த நோக்கத்துடன் அவர் விமான நிலையத்தில் சுற்றித் திரிந்தார் என்பதும் தெரியவில்லை? அந்த நபரை சோதனை செய்தபோது ஈழத் தமிழர் பாதுகாப்பு கழகம் மற்றும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்று குறிப்பிடப்பட்ட 2 ஸ்டிக்கர்கள் இருந்தன.
இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள், மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள், கியூ பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த இளைஞரிடம் தீவிர விசாரணை நடத்தி அருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியமாக நடந்துள்ளதை அடுத்து, அவர்களிடமும் உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது.